உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் சாகசம் செய்தவகாகக் கூறி,  சிலர் பைக்கில் அபாயகரமாக பயணம் செய்துள்ளனர்.


பயணம் செய்தது மட்டும் இன்றி, அவர்கள் பைக்கில் சென்ற வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அது, தற்போது வைரலாகி வருகிறது. 


அந்த வீடியோவில், 14 பேர் சேர்ந்து மூன்று பைக்கில் பயணம் செய்துள்ளனர். ஒரு பைக்கில் 6 பேரும், இரண்டு பைக்குகளில் தலா 4 பேரும் பயணம் செய்வதை அந்த வீடியோவில் காணலாம். 


பரேலி நகரம் தியோரானியன் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீடியோ வைரலானதை தொடர்ந்து, அதிரடி நடவடிக்கையில் இறங்கிய காவல்துறை அந்த பைக்குகளை பறிமுதல் செய்தனர்.


இதுகுறித்து பரேலி நகர மூத்த காவல்துறை அதிகாரி அகிலேஷ் குமார் கூறுகையில், "தகவல் கிடைத்ததும் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.






இதுபோன்ற சம்பவங்களில் இளைஞர்கள் தொடர்ந்து ஈடுபடுவது கவலை அளித்து வருகிறது. குறிப்பாக, சாகசம் செய்வதாகக் கூறி உயிரை பணயம் வைத்து இம்மாதிரியான செயல்களை செய்வதை தடுக்க வேண்டும். இதற்கு, மத்திய, மாநில அரசுகள் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.


இதேபோல, சமீபத்தில், இன்ஸ்டாகிராமில் வைரலான வீடியோவில்,  இளைஞர் ஆபத்தான முறையில் ஏறி ஸ்டண்ட் செய்தது பதிவாகி இருந்தது. ஆனால், அடுத்த சில விநாடிகளில் அவர் அதிலிருந்து கீழே விழுந்து விடுகிறார். 


அந்த வீடியோ நவம்பர் 8ஆம் தேதி எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் கமெண்ட்ஸ் செக்‌ஷனில் பலரும் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். சிலர் இளைஞரின் துணிச்சலைப் பாராட்டி இருந்தனர். சிலர் அந்த இளைஞரின் முட்டாள்தனத்தை வசைபாடி இருந்தனர்.


கடந்த அக்டோபர் மாதம் சென்னை அண்ணாசாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இளைஞர் ஒருவர் பைக் சாகசத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.