உத்தரகண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரின் பல பகுதிகள் புதைந்து வரும் நிலையில், அண்டை மாநிலமான உத்தர பிரதேசத்தின் அலிகாரில் விரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது. பல வீடுகளில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.


வீடுகளில் விரிசல் ஏற்படுவது குறித்து அச்சம் தெரிவித்துள்ள உள்ளூர்வாசியான சசி, "கடந்த சில நாட்களாக சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டு பீதியில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 


இதுகுறித்து புகார் தெரிவித்தும், மாநகராட்சி அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுக்காமல், உறுதி மட்டும் அளித்து வருகின்றனர். வீடுகள் இடிந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளோம்" என்றார்.


"ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அரசால் பைப்லைன் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது, அதில் லீக் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், விரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது. 3-4 நாட்கள் ஆகிவிட்டது. 


இது பற்றி நாங்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவித்தும், இதுவரை எந்த உதவியும் வழங்கப்படவில்லை. பயத்தில் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்" என அஃப்ஷா மஷ்ரூர் கூறுகிறார்.


இதற்கிடையில், மாநகராட்சி கூடுதல் கமிஷனர் ராகேஷ் குமார் யாதவ், இப்பிரச்னையை கவனத்தில் கொண்டு, துறை மூலம் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.


இதுகுறித்து அவர் பேசுகையில், "கன்வாரிகஞ்ச் பகுதியில் சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தற்போதுதான் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இந்த விவகாரம் இன்னும் முழு கவனத்திற்கு வரவில்லை. எங்கள் குழுவை அந்த இடத்திற்கு அனுப்புவோம். தேவையான நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொள்ளும்" என்றார்.


முன்னதாக, ஜோஷிமத் நகரின் பல பகுதிகளில் நிலத்தில் மண் பெயர தொடங்கியதால் கட்டிடங்களில் தொடர் விரிசல் ஏற்பட்டது. இதனால், மக்கள் பீதியின் உச்சத்தில் உள்ளனர். ஆன்மீகம் மற்றும் சுற்றுலாவுக்கு பெயர் போன ஜோஷிமத் நகரத்தில் இருந்து அரசு நிர்வாகம் மக்களை வெளியேற்றி வருகிறது.


இதையடுத்து, அவசர கூட்டத்திற்கு பிரதமர் அலுவலகம் அழைப்பு விடுத்தது. பிரதமர் மோடியின் முதன்மை செயலாளரான பி.கே. மிஸ்ரா தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.


 






அமைச்சரவை செயலாளர், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ஜோஷிமத் நிலவரம் குறித்து ஆலோசித்தனர்.