தங்கையின் திருமணத்திற்கு நகை வாங்க முடியாததால் மணமுடைந்த அண்ணன் தற்கொலை செய்து கொள்ள, நிச்சயித்தப் பெண்ணை கைவிடாமல் இளைஞர் கரம் பிடிக்க ஒட்டுமொத்த கேரளாவும் நெகிழ்ச்சியில் உள்ளது.


அண்மையில் கேரள மாநிலம் வரதட்சணைக் கொடுமை மரணங்களுக்காக அடிபட்டது. 
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதே நிரம்பிய இளம் பெண் விஸ்மயா மர்மமான முறையில் தன்னுடைய கணவர் வீட்டில் இறந்திருந்தார். இவருடைய மரணத்திற்கு கணவர் கிரண் குமாரின் குடும்பம் தான் காரணம் என்று குற்றம் சாட்டு பட்டு வருகிறது. மேலும் கிரண் குமார் காவல்துறையினரிடம் சரண் அடைந்தார். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.


இதனைத் தொடர்ந்து, உத்ரா வழக்கிற்ககா கேரளா மீண்டும் செய்திகளில் அடிபட்டது. கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சல் பகுதியில் உத்ரா என்ற 26 வயது பெண் கடந்த 2020-ம் ஆண்டு தனது பெற்றோர் வீட்டில் பாம்பு கடித்து உயிரிழந்தார். இந்த நிலையில், உத்ராவின் கணவர் சூரஜின் நடத்தையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணையை தொடங்கினர். அதில் சூரஜ் தான் பாம்பை வைத்து மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.


இந்த இரண்டு சம்பவங்களைத் தொடர்ந்து கேரள முதல்வர் வரதட்சணைக் கொடுமைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.  இதற்கான சட்டங்கள் இயற்றப்பட்டு வருவதாக முதல்வர் பினராயி விஜயன் சட்டமன்றத்திலேயே தெரிவித்தார்.


இந்நிலையில் கேரள வரதட்சணைக் கொடுமை களங்கத்தை சற்றே மறக்கச் செய்யும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கேரள மாநிலம் திரிசூரைச் சேர்ந்தவர் விபின். இவரது சகோதரி வித்யா. இவருக்கும் வெளிநாட்டில் வேலை பார்க்கும் நிதின் என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. தங்கையின் திருமணத்திற்காக விபின் வங்கியில் கடன் கேட்டிருந்தார். ஆனால் அவருக்குக் கடன் கொடுக்கப்படவில்லை. இதனால், ஏமாற்றமடைந்த விபின் தங்கையையும், தாயையும் நகைக்கடைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் கடையில் அவர்கள் இருவரையும் விட்டுவிட்டு வீடு திரும்பினார். வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இந்நிலையில் வித்யாவுக்காகப் பேசப்பட்ட இளைஞர் நிதின் திட்டமிட்டபடி வித்யாவை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்காக நாங்கள் ஏதும் வரதட்சணை கேட்கவில்லை. வித்யாவுக்கு நகை போடவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதனால் அவரை திருமணம் செய்து கொண்டேன் என்றார். நேற்று காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் இருந்த முகூர்த்தத்தில் வித்யா, நிதின் திருமணம் நடந்தது. நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர்.