VIP Security Change: பிளாக் கேட்ஸ் எனப்படும் கருப்பு பூனை கமாண்டோ படை, இனி விஐபிகளின் பாதுகாப்பு பணியில் ஈடுபடாது என கூறப்படுகிறது.


விஐபி பாதுகாப்பில் மாற்றம்:


மத்திய அரசின் விஐபி பாதுகாப்பு நடவடிகையானது, ஒருபெரும் மாற்றம் மற்றும் மறுசீரமப்பை எதிர்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, NSG மற்றும் ITBP படையினரின் பாதுகாப்பில் உள்ள  அதிக ஆபத்துள்ள முக்கிய பிரமுகர்களை பாதுகாக்கும் பணி மற்ற துணை ராணுவப் படைகளுக்கு மாற்றப்பட உள்ளதாகவும்  எதிர்பார்க்கப்படுகிறது. NSGயின் 'பிளாக் கேட்' எனப்படும் கருப்பு பூனை கமாண்டோக்களை விஐபி பாதுகாப்புப் பணிகளில் இருந்து முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்படுவார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


அரசின் திட்டம் என்ன?


என்.எஸ்.ஜி. எனப்படும் தேசிய பாதுகாப்பு குழு கடந்த 1984-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் விமான கடத்தல்கள் போன்ற சூழல்களை கையாளவதற்காக அந்த குழு தொடங்கப்பட்டது. ஆனால், காலப்போக்கில் அதன் கருப்பு பூனைப்படை கமாண்டோக்கள், மிக முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், ஒரே நேரத்தில் பல நகரங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்தால், கருப்பு பூனைப்படை கமாண்டோக்கள் தேவைப்படுவார்கள். எனவே, அவர்கள் முக்கிய பிரமுகர்களை பாதுகாப்பது தேவையற்ற சுமையாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கருதுகிறது. இதன் காரணமாக அந்த பணியில் இருந்து கருப்பு பூனை கமாண்டோக்களை விடுவிப்பது தொடர்பாக, கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 


மோடி 3.0 அரசு அதிரடி:


தற்போது, 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்றுள்ள நிலையில், விரைவில் விஐபிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மறுஆய்வு செய்ய உள்ளது. அதில், முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பை வாபஸ் பெறுவதா, குறைப்பதா, அதிகரிப்பதா என்று முடிவு செய்யப்படும். மேலும், கருப்பு பூனை கமாண்டோக்கள் படை, இந்தோ திபெத்திய எல்லை போலீஸ் ஆகியவற்றை முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பொறுப்பில் இருந்து முற்றிலும் விடுவிக்க முடிவு எடுக்கப்படலாம்,


இதன்மூலம், சுமார் 450 கருப்பு பூனைப்படை கமாண்டோக்கள் அப்பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். அவர்கள் அயோத்தி ராமர் கோயில், தென்மாநிலங்களின் முக்கிய பகுதிகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என கூறப்படுகிறது. தொடர்ந்து, அவர்களின் பாதுகாப்பில் இருந்து வரும் முக்கிய பிரமுகர்கள், மத்திய ரிசர்வ் போலீஸ் படை அல்லது மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் பாதுகாப்பை பெறுவார்கள்.


கருப்பு பூனை பாதுகாப்பு:


தற்போது, இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பில் உள்ள 9 மிக முக்கிய பிரமுகர்களுக்கு கருப்பு பூனைப்படை பாதுகாப்பு அளித்து வருகிறது. உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், முன்னாள் முதலமைச்சர் மாயாவதி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், பாஜக மூத்த தலைவர் அத்வானி, மத்திய கப்பல் & நீர்வழி போக்குவரத்து அமைச்சர் சர்பானந்தா சோனோவால், சத்தீஷ்கார் முன்னாள் முதலமைச்சர் ராமன்சிங், முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத். தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கருப்பு பூனைப்படை பாதுகாப்பில் உள்ளனர்.


இதுபோல், இந்தோ திபெத்திய எல்லை போலீஸ் என்ற துணை ராணுவப்படையின் பாதுகாப்பில், பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் உள்ளனர்.