ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் சர்வதேச எல்லையை ஒட்டிய கிராமம் ஒன்றின் அருகே இன்று மாலை பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
மீண்டும் துப்பாக்கிச் சூடு:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் புறநகர் பகுதியில் இன்று மாலை பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. முதற்கட்ட தகவல்களின்படி, மாவட்டத்தின் ஹிராநகர் பகுதியில் உள்ள சைதா கிராமம் அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர்.
பாதுகாப்புப் படையினரால் ஒரு பெரிய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும், சர்வதேச எல்லைக்கு (ஐபி) அருகில் உள்ள முழுப் பகுதியும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கூடா பஞ்சாயத்து பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் எல்லையில் ஊடுருவவதற்கான ஒரு முயற்சியாக இருக்கலாம் என நம்பப்படுகிறது எனவும் குறிப்பிட்டனர்.
ஹிராநகர் செக்டாரில் உள்ள சேடா சோஹல் கிராமத்தில் இரவு 7.45 மணியளவில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் காணப்பட்டது. இதையடுத்து கதுவா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கூச்சலிட்ட மக்கள்:
துப்பாக்கி சுடும் சத்தத்தை கேட்டு அப்பகுதி மக்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து அவர்கள் அருகிலுள்ள காட்டிற்குள் தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் மற்றும் பிற பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தப்பியோடிய சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர் என்று அந்த அதிகாரி கூறினார்.
முன்னதாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசியில் நேற்று முன் தினம் (ஜூன் 9) ஷிவ் கோரி கோவிலுக்கு பக்தர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி இருந்தனர். இதையடுத்து பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.