உத்தரப் பிரதேச மாநிலம் அச்சல்டா பகுதியில் 15 வயது தலித் சிறுவனை ஆசிரியர் ஒருவர் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அச்சிறுவன் உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.
சமூக அறிவியல் தேர்வில் எழுத்துப் பிழை செய்ததால், செப்டம்பர் 7 ஆம் தேதி அன்று சிறுவன் பள்ளி ஆசிரியர் அஷ்வினி சிங்கால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுவனான நிகித் டோஹ்ரே, அண்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சனிக்கிழமை இரவு இறந்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு நேற்று மாலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுவனின் குடும்பமும், அரசியல் கட்சியான பீம் ஆர்மியின் உறுப்பினர்களும் முதலில் உடலை தகனம் செய்ய மறுத்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை உடனடியாக கைது செய்யக் கோரியுள்ளனர்.
ஆனால், அவர் தற்போது தப்பி ஓடிவிட்டார். அச்சால்டா பகுதியில் உள்ள பள்ளிக்கு வெளியே சாலையில் அமர்ந்து மக்கள் மறியலில் ஈடுபட்டனர். போராட்டம், சற்று நேரத்திலேயே வன்முறையாக மாறியது. உள்ளூர்வாசிகள், கோபத்தில் போலீஸ் ஜீப்பை தீ வைத்து எரித்தனர். மேலும் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
மூத்த காவல்துறை மற்றும் மாவட்ட அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து சிறுவனின் குடும்பத்தினரும் பீம் ஆர்மி உறுப்பினர்களும் நிகித்தின் உடலை தகனத்திற்காக தங்கள் கிராமத்திற்கு எடுத்துச் செல்ல ஒப்புக்கொண்டனர்.
விசாரணை நடைபெற்று வருவதாகவும், ஆசிரியர் அஷ்வினி சிங் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் மூத்த அலுவலர் ஒருவர் தெரிவித்தார். இந்த போராட்டம் பீம் ஆர்மியால் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும், ஆனால் வன்முறையில் ஈடுபட்டவர்கள் சமூக விரோதிகள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
கடந்த செப்டம்பர் 7ம் தேதி, பள்ளியில் நடந்த சமூக அறிவியல் தேர்வின் போது, ஒரு வார்த்தையை தவறாக உச்சரித்ததால், மயங்கி விழும் வரை, ஆசிரியர் மகனைத் தாக்கியதாகவும், மயங்கி விழும் வரை உதைத்ததாகவும், போலீசில் அளித்த புகாரில், சிறுவனின் தந்தை கூறியுள்ளார்.
சிறுவனின் சிகிச்சைக்காக ஆசிரியர் முதலில் 10,000 ரூபாய் கொடுத்ததாகவும், பின்னர் 30,000 ரூபாய் கொடுத்ததாகவும், ஆனால் பின்னர் அவரது தொலைபேசி அழைப்புகளை ஏற்கவில்லை என புகாரில் கூறப்பட்டுள்ளது. சிறுவனின் தந்தை, ஆசிரியரை சந்தித்தபோது, சாதிய வார்த்தைகளை சொல்லி மோசமாக திட்டியதாக கூறினார்.