குஜராத் சட்டமன்ற பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி மற்ற கட்சிகளை விட முன்னதாகவே தேர்தல் பிரச்சாரத்தினை நடத்தி வருகிறது. குறிப்பாக அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜிர்வால் பிரச்சாரத்தில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளார். ஏற்கனவே பஞ்சாப் சட்ட மன்ற பொதுத் தேர்தலில் முழுவீச்சில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி, குஜராத் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க முழு முனைப்புடன் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. குஜராத்  பாஜகவின் கோட்டை என்பதை நன்கு உணர்ந்த ஆம் ஆத்மி ஏற்கனவே ஆட்டோ ஓடுநர்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் பிரச்சார பொதுக்கூட்டத்தினை நடத்தியது குறிப்பிடத்தக்கது.






அவ்வகையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜிர்வால், குஜராத்தில் தூய்மை பணியாளர்கள் மட்டும் பங்கேற்கும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, அங்கு கூடியிருந்த தூய்மை பணியாளர்களிடம் உரையாடினார். அப்போது சோலாங்கி எனும் பட்டியலின தூய்மை பணியாளார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிர்வாலிடம், ’ஐயா, நீங்கள் ஏற்கனவே குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று உணவு சாப்பிட்டீர்கள், அதேபோல், வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளரான எனது வீட்டிற்கு வந்து உணவு சாப்பிடுவீர்களா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த, அரவிந்த் கெஜிர்வால், எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தின் போது பட்டியலின மக்கள் வீட்டிற்குச் சென்று உணவு சாப்பிடுவார்கள், ஆனால் எந்த பட்டியலின மக்களையும் தனது வீட்டிற்கு சாப்பிட அழைக்க மாட்டார்கள், நான் உங்களை எனது வீட்டிற்கு சாப்பிட அழைக்கிறேன் நீங்கள் வருவீர்களா என கெஜிர்வால் கேட்டார். அப்போது அங்கு கூடியிருந்த அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.


கெஜிர்வாலின் அழைப்பை ஏற்று டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு சோலாங்கி தனது குடும்பத்துடன் சென்றார். ஆம் ஆத்மியின் குஜராத் இணைப் பொறுப்பாளர் ராகவ் சாதா, விமான நிலையத்தில் தூய்மைப் பணியாளர் சோலங்கியையும் அவரது குடும்பத்தினரையும் காலைத் தொட்டு வணங்கி வரவேற்றார். "இது நடக்கும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை, நாங்கள் கண்களைத் திறந்து கனவு காண்கிறோம். நான் எந்த தலைவரையும் சந்தித்ததில்லை, இன்று முதல்வரின் வீட்டிற்குச் செல்கிறோம். குஜராத்தில் வால்மீகி சமூகத்தின் நலனுக்காக ஆம் ஆத்மி பாடுபடும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என சோலங்கி, அவரது தாய் மற்றும் தங்கையுடன் கூறினார்.  சோலாங்கிக்காக காத்திருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிர்வால், சோலாங்கியை கட்டிப்பிடித்து வரவேற்றார்.  அங்கு கெஜிர்வாலுக்கு சோலாங்கி அம்பேதகர் படத்தினை பரிசாக வழங்கினார். இந்த நிகழ்வு குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆம் ஆத்மி கட்சி பகிர்ந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தீவிரமான  தேர்தல் பிரச்சாரம் ஆளும் கட்சியையும் மற்றா எதிர் கட்சிகளையும் புருவம் உயர்த்தச் செய்துள்ளது.