உத்தரப் பிரதேசம் மாநிலம் பரேலியில் உள்ள கிராமப்புற பகுதிகளில் நடக்கும் கொலை சம்பவங்கள் பெரும் பரபரப்பை கிளப்பி வருகின்றன. குறிப்பாக, 13 மாத கால இடைவெளியில் ஏறக்குறைய ஒரே வயதுடைய ஒன்பது பெண்கள் கிட்டத்தட்ட ஒரே பாணியில் கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, இந்த கொலைகளை எல்லாம் சீரியல் கில்லர் செய்தாரா என்ற அச்சம் எழுந்துள்ளது.


பரபரப்பை கிளப்பும் சீரியல் கில்லர்: பெண்கள் அனைவரும் தங்கள் சொந்த சேலையால் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டனர் என்ற பகீர் தகவலையும் காவல்துறை தரப்பு வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு, ஷாஹி, ஷீஷ்கர் மற்றும் ஷேர்கர் காவல் நிலையப் பகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் 40-65 வயதுடைய எட்டு பெண்கள் கொல்லப்பட்டனர். இந்த மூன்று பகுதிகளும் அருகருகே அமைந்துள்ளன.


இந்த கொலைகளில் ஒரு ஒற்றுமை உள்ளது. கரும்பு வயல்களில் ஆடைகள் களைந்த நிலையில் இந்த சடலங்கள் காணப்பட்டன. ஆனால், பாலியல் வன்கொடுமைக்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இந்த கொலைகளில் மற்றொரு ஒற்றுமையும் இருக்கிறது. அவர்கள் அணிந்திருந்த புடவையை பயன்படுத்தி மூச்சுத்திணற வைத்து பெண்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.


கடந்தாண்டு, ஜூன் மாதத்தில் மூன்று கொலைகள் அடுத்தடுத்து நடந்தன. இதைத் தொடர்ந்து ஜூலை, ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் தலா ஒன்று மற்றும் நவம்பரில் இரண்டு கொலைகள் நடந்துள்ளன.


அச்சத்தில் பெண்கள்: எட்டாவது கொலையை தொடர்ந்து, 300 போலீஸ்காரர்களைக் கொண்ட கூடுதல் படை அங்கு குவிக்கப்பட்டுள்ளது. சீருடை அணிந்த மற்றும் சாதாரண உடையிலும் அதிகாரிகள் 14 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய நபர்களையும் குற்ற பட்டியலில் உள்ளவர்களையும் கண்காணித்தது வருகின்றனர்.


கொலையாளி அல்லது கொலையாளிகள் பிடிபடவில்லை என்றாலும், அதன்பிறகு, அங்கு வேறு கொலைகள் எதுவும் நடக்கவில்லை என்பதால் உள்ளூர்வாசிகளும் காவல்துறையினரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். கடந்த 7 மாதங்களாக அமைதி திரும்பிய நிலையில், கடந்த மாதம் நடந்த கொலை சம்பவம் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


45 வயதான அனிதா கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூலை மாதம் கரும்பு தோட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஷெர்கரில் உள்ள புஜியா ஜாகிர் கிராமத்தில் வசிக்கும் அனிதா, ஃபதேகஞ்சின் கிர்கா கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றிருந்தார்.


கடந்த ஜூலை 2ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய அவர், பணம் எடுப்பதற்காக வங்கிக்குச் சென்றார். ஆனால், அவர் வீடு திரும்பவே இல்லை. பின்னர், கரும்பு தோட்டத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவர் சேலையால் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரியவந்தது.


இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த ஆண்டு நடந்த கொலைகளுக்குப் பின்னணியில் ஒரு சீரியல் கில்லர் இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது. கடந்த ஜூலையில் நடந்த கொலை அந்த சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளது" என்றார்.


கொலைகள் நடந்த பகுதிகளைச் சேர்ந்த பலரிடம் பேசிய பிறகு, மூன்று சந்தேக நபர்களின் ஓவியங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.