உத்தர பிரதேசம் அலிகாரில் இக்லாஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிராம தலைவருக்கு எதிரான தகவலை கோரி இருந்த 32 வயது நபரை கொலை செய்தது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் தேவ்ஜீத் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர், கோரை கிராமத்தில்  இன்டர்நெட் மையத்தை நடத்தி வந்துள்ளார்.


நில அபகரிப்பு மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கிராமத் தலைவர் தேவேந்திர சிங்குக்கு எதிராக தேவ்ஜீத் சிங் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கோரியிருந்தார்.


இதுகுறித்து இக்லாஸ் காவல் நிலைய அதிகாரி விஜய் சிங் கூறுகையில், "கிராமத்தில் தரமற்ற வளர்ச்சிப் பணிகள் இருப்பதாக தேவ்ஜீத் சிங் குற்றம் சாட்டினார்.


ஞாயிற்றுக்கிழமை அன்று கிராமத் தலைவர் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து கம்புகள் மற்றும் கூரிய ஆயுதங்களை கொண்டு தாக்கியதில் தேவ்ஜீத் சிங் இறந்ததாக அவரது குடும்பத்தினர் கூறினர். 


அவரது சகோதரர் சுரேந்திர சிங்கும் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.


தேவ்ஜீத் சிங்கின் குடும்ப உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், கிராமத்தலைவர் தேவேந்திர சிங், அவரது மகன் கார்த்திக் மற்றும் ஆறு பேர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 302 (கொலை), 147 (கலவரம்), 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 


முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, குற்றச் சதியில்  ஈடுபட்டதற்காக லுவ்குஷ் மற்றும் தினேஷ் ஆகியோரின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டன. ஹர்வீர் ஒருவருடன் லுவ்குஷ் மற்றும் தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற குற்றவாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது" என்றார்.


கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மட்டும் அல்லாமல், உலக அளவில், கொலை சம்பவங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால், காதல் விவகாரத்தில் கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளது தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்சிஆர்பி) வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.


கடந்த 2001 முதல் 2007 வரை நடந்த குற்றசம்பவங்கள் தொடர்பாக என்சிஆர்பி புள்ளி விவரத்தில், கடந்த 2001 ல் 36,202 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இது, 2017 ல் 28,653 ஆக சரிந்துள்ளது. இது 21 சதவீதம் குறைவாகும். 


இதே காலகட்டத்தில், தனி நபர் விரோதம் காரணமாக நடந்த கொலை சம்பவங்கள் 4.3 சதவீதமும், சொத்து விவகாரத்தில் நடந்த கொலை சம்பவங்கள் 12 சதவீதமும் குறைந்துள்ளது. ஆனால், காதல் விவகாரத்தில் நடந்த கொலை சம்பவங்கள் 28 சதவீதம் அதிகரித்துள்ளது.