தென்னிந்தியாவில் பா.ஜ.க. செல்வாக்கு மிகுந்த மாநிலம் கர்நாடகா மட்டுமே ஆகும். அங்கு ஆட்சியில் இருந்த பா.ஜ.க. கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிடம் ஆட்சியை பறிகொடுத்தது. அந்த மாநில பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதலமைச்சருமானவர் எடியூரப்பா. கடந்த முறை பா.ஜ.க. ஆட்சியில் இருந்த போது வயது காரணமாக பாதியிலே அவருக்கு பதிலாக முதலமைச்சராக பசவராஜ் பொம்மை நியமிக்கப்பட்டார்.


கர்நாடக பா.ஜ.க. தலைவர்:


இந்த நிலையில், கர்நாடக பா.ஜ.க. தலைவராக எடியூரப்படா மகனும், எம்.எல்.ஏ.வுமாகிய விஜயேந்திர எடியூரப்பா  நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலத்தின் புதிய பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விஜயேந்திர எடியூரப்பாவிற்கு பா.ஜ.க. தலைவர்களும், சக எம்.எல்.ஏ.க்களும், கட்சித் தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


கர்நாடகா பா.ஜ.க. தலைவராக பொறுப்பு வகித்து வந்த நலீன்குமார் கதீலுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ள விஜயேந்திரா எடியூரப்பா கர்நாடகாவின் சிகரிபுரா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். கர்நாடக பா.ஜ.க. தலைவர் பதவிக்கு மூத்த தலைவர்களான ஷோபா கரண்லாஜி, சி.டி.ரவி மற்றும் சுனில்குமார் ஆகியோர் மத்தியிலும் போட்டி இருந்தது. ஆனால், முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தனது செல்வாக்கால் விஜயேந்திர எடியூரப்பாவிற்கு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.


எடியூரப்பா மகன்:


தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விஜயேந்திரா 1976ம் ஆண்டு பிறந்தவர். இவரது முழுப்பெயர் விஜயேந்திரா பூகனகேரே எடியூரப்பா. இவர் கர்நாடக பாரதிய ஜனதா யுவ மோர்சா கட்சியின் பொதுச்செயலாளராக பதவி வகித்தவர். கடந்த சட்டமன்ற தேர்தலில் எடியூரப்பாவிற்கு வாய்ப்பு அளிக்காத காரணத்தால் அவருக்கு பதிலாக அவரது மகன் விஜயேந்திரா முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் களமிறங்கினார்.


முதன்முறைதான் எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகிக்கும் விஜயேந்திராவுக்கு கட்சியின் மாநில தலைவர் பதவி வழங்கியிருப்பதற்கு, கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜயேந்திராவின் சகோதரர் பி.ஒய்.ராகவேந்திரா சிமோகா மக்களவைத் தொகுதி உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தாண்டு நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தென்னிந்தியாவில் பா.ஜ.க.விற்கு வெற்றி வாய்ப்பு உள்ள கர்நாடகாவில் கட்சியின் தலைவராக எடியூரப்பா மகன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதனால், அவர் வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தி தருவாரா? அவருக்கு அனுபவமிக்க மூத்த தலைவர்கள் ஒத்துழைப்பு அளிப்பார்களா? என்றும் சவால்களும், எதிர்பார்ப்புகளும் அவர் முன் எழுந்துள்ளது. மேலும், தனக்கு பிறகும் தன் வாரிசுகளால் பா.ஜ.க.வை கட்டுப்படுத்த எடியூரப்பா முயற்சிப்பதாகவும் அவர் மீது விமர்சனமும் எழுந்துள்ளது. 


மேலும் படிக்க: Watch Video: பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை! ஜனாதிபதி வந்த நேரத்தில் கைவரிசை!


மேலும் படிக்க: கட்சி சின்னம் காரா இருந்தாலும் அவருக்கு சொந்தமா ஒரு கார் கூட இல்லையாம்... கேசிஆரின் சொத்து விவரம்