இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி என்று அழைக்கப்படும் பி.ஆர்.அம்பேத்கரின் உலகின் மிக உயரமான சிலையை ஆந்திர மாநில அரசு நேற்று விஜயவாடாவில் திறக்கப்பட்டது.  இந்த உலகின் உயரமான அம்பேத்கர் சிலை, இன்று (ஜனவரி 20) முதல் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படுகிறது. 


உயரம் 206 அடி:


ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 125 அடி உயரம் கொண்டதாக உள்ள நிலையில், 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது. அம்பேத்கர் சிலை அமைக்கப்படுவதற்கான இத்திட்டம் மொத்தம் ரூ.404.35 கோடி செலவில் 18.81 ஏக்கர் நிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 400 மில்லியன் டன் எஃகு மற்றும் 120 மில்லியன் டன் வெண்கலத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் உயரமான சிலையான சர்தார் படேலின் சிலையை கட்டிய சிற்பி ராம் சுதாரால் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டது. 


இந்த சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ஸ்மிருதி வனம் என்றும், அம்பேத்கரின் சிலைக்கு அருகே பூங்காக்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மைதானத்தில் மினி தியேட்டர், அருங்காட்சியகம், வாகனம் நிறுத்துமிடம், உணவு விடுதி உள்ளிட்ட பல அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 


அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை காண்பிக்க எல்இடி திரைகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் 2,000 இருக்கைகள் கொண்ட ஒரு அரங்கமும், உணவு விடுதியும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. 


இந்தநிலையில், உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலையை ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று திறந்து வைத்தார். இந்த சிலையை திறந்து வைத்து பேசிய அவர், “விஜயவாடாவில் இன்று நம் நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த சாதிய வரலாற்றை மாற்றிய ஒரு அழியாத சமூக சீர்திருத்தவாதியின் சிலையை நாங்கள் திறந்து வைக்கிறோம். டாக்டர் அம்பேத்கர் தீண்டாமை மற்றும் ஆதிக்க சித்தாந்தத்திற்கு எதிராகக் கிளர்த்தெழுந்தார். அதே நேரத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு கல்வியை கொண்டு சென்றார்” என்று தெரிவித்தார். 


இந்தநிலையில், நேற்று ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி திறந்து வைத்த இந்த அம்பேத்கர் சிலை, இன்று முதல் மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படுகிறது. இதுகுறித்து முன்னதாக ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி எக்ஸ் ( ட்விட்டர்) பக்கத்தில் எழுதியபோது, “விஜயவாடாவில் எங்கள் அரசால் நிறுவப்பட்ட அம்பேத்கரின் 206 அடி உயரம் கொண்ட இந்த சிலை மாநிலத்திற்கு மட்டுமல்ல, இந்திய நாட்டிற்கும் ஒரு சின்னம்” என்று தெரிவித்தார். 






அண்டை மாநிலமான தெலுங்கானாவில் அம்பேத்கரின் இரண்டாவது மிக உயரமான சில அமைந்துள்ளது. இது 175 அடி உயரம் கொண்டதாகும்.