1971 இந்திய-பாகிஸ்தான் போரின் முடிவு மற்றும் பங்களாதேஷின் விடுதலையைக் குறிக்கும் வகையில் டிசம்பர் 16 அன்று விஜய் திவாஸ் அல்லது வெற்றி நாள் நினைவுகூரப்படுகிறது. 51 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் சரணடைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு இந்தியா இந்த நாளில் வெற்றியை அறிவித்தது.
இந்திய இராணுவம் மற்றும் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் (பிஎல்ஏ) சில நாடகளுக்கு முன் மோதலில் ஈடுபட்டனர். இது குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த நிலையில், கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்ஏசி), தவாங்கில் பிஎல்ஏவின் அத்துமீறலை இந்தியப் படைகள் உறுதியாக எதிர்த்தனர் என லெப்டினன்ட் ஜெனரல் கலிதா கூறினார்.
விஜய் திவாஸ் விழாவில், கிழக்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஆர்பி கலிதா, சீன மக்கள் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) அத்துமீற முயற்சித்த போதிலும், இந்தியாவின் வடக்கு எல்லையில் உள்ள எல்லைப் பகுதிகளில் நிலைமை " கட்டுப்பாட்டில் உள்ளது" என்று வலியுறுத்தினார். லெப்டினன்ட் ஜெனரல் கலிதா, ராணுவ வீரர்களின் தியாகமும் வீரமும் நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மக்களின் கனவுகளை நிறைவேற்ற உதவுகிறது என்று வலியுறுத்தினார்.
விஜய் திவாஸ் முன்னிட்டு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த போரில் உயிர் பிரிந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதாகவும், இந்திய நாடு என்றும் நம் ராணுவத்திற்கு கடமை பட்டிருக்கும் என பதிவிட்டிருந்தார்.
இதே போல் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போர் நினைவுச் சின்னத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.