குருவிக்காரர் சமுதாயத்தை பழங்குடி பிரிவில் சேர்க்க மக்களவையில் பல்வேறு அரசியல் வேறுபாடுகளைக் கடந்து மத்திய அரசு கொண்டு வந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதனால், இந்த மசோதா ஒப்புதலுக்காக, மாநிலங்களவைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 


முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு:


இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நரிகுறவ மற்றும் குருவிக்கர சமூக மக்களை பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி , பிரதமர் மோடிக்கு ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தேன்.  தொடர் முயற்சியின் விளைவாக, மக்களவையில் அதுதொடர்பான மசோதா குறிப்பிடத்தக்க வகையில் நிறைவேற்றப்பட்டதை வரவேற்கிறோம். குருவிக்கார மற்றும் நறிக்குறவ சமூகத்தினரின் கண்ணியமான வாழ்க்கைக்கான, அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம் என, முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.






 


மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா:


தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள குருவிக்காரர் சமூக மக்கள் தங்களை பழங்குடியினர் சமுதாயத்துடன் இணைக்க வேண்டும் என தொடர்ந்து மாநில அரசிடமும், மத்திய அரசிடமும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் குளிர் காலக் கூட்டத்தொடரில், மத்திய பழங்குடியின விவகாரத்துறை அமைச்சர், அர்ஜுன் முண்டா தமிழ்நட்டில் உள்ள குருவிக்காரர் சமூக மக்களை பழங்குடியின சமுதாயத்தில் இணைக்கும் மசோதாவினை அறிமுகம் செய்தார்.


இதற்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் ஒருமனதாக வாக்களித்து ஒப்புதல் அளித்துள்ளனர். இதனால் இந்த மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கபப்ட்டுள்ளது. மாநிலங்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர் இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். 


குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பின்னர், அரசிதழில் வெளியிடப்பட்டு சட்டம் அமலுக்கு வரும். இந்த சட்டம் மேற்குறிப்பிட்ட நடைமுறைகள் முடிந்து நடைமுறைக்கு வர 2023ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் வரை கால அவகாசம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சட்டம் அமலுக்கு வருவதன் மூலம், குருவிக்கார மற்றும் நரிக்குறவ மக்கள் நீண்ட காலமாக அனுபவித்து வந்த, அடிப்படை உரிமைகளை கூட பெற முடியாத வகையிலான பல்வேறு இன்னல்களுக்கு முடிவு கட்ட முடியும் என்ற சூழல் எழுந்துள்ளது.