உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண் நோயாளி ஒருவரின் தலை முடியை பிடித்து செவிலியர் இழுத்துச்செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் சீதாப்பூரில் மாவட்ட மருத்துவமனையின் பெண் வார்டுக்குள் ஒரு பெண்ணை செவிலியர் ஒருவர் தலை முடியை பிடித்தவாரு இழுத்துச்செல்கிறார். தலை முடியை பிடித்தவாரே இழுத்துச்சென்று அங்குள்ள காலி படுக்கையில் கிடத்துகிறார். அழுதுகொண்டே வரும் அந்த பெண், மயங்கியவர் போல அந்த படுக்கை கிடத்தப்பட்ட பொழுது, வலது புறத்தில் நின்றிருந்த ஆண் ஒருவர் பெண்ணின் கையை பிடித்து இழுத்து படுக்கையில் சரியாக படுக்க வைக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் செல்விலியரின் இந்த செயலுக்கு கண்டனங்களும் வலுத்து வந்தன.
வைரலான வீடியோ கிளிப்பைப் பார்த்து, சீதாபூரின் தலைமை மருத்துவ அதிகாரி, டாக்டர் ஆர்.கே. சிங், அந்த பெண் நோயாளி அக்டோபர் 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்டதாகக் கூறினார். மேலும், “அடுத்த நாள் இரவு, அவரது குடும்பத்தினர் மருத்துவமனையை விட்டு சென்றது. அந்தப் பெண் நள்ளிரவு 12 முதல் 1 மணியளவில் கழிவறைக்கு அருகில் சென்று வன்முறையில் ஈடுபட தொடங்கினார். தனது வளையல்களை உடைத்துக்கொண்டும் உடைகளை கிழித்தும் அந்த பெண் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் வார்டில் இருந்த மற்ற பெண் நோயாளிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் மருத்துவமனை ஊழியர்கள் அவளைக் கட்டுப்படுத்த தலையிட வேண்டியிருந்தது . வார்டில் பணியில் இருந்த செவிலியர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். மற்ற வார்டுகளில் இருந்து செவிலியர்கள் உதவிக்கு விரைந்தனர்” என்றார்.
செவிலியரின் செயல் குறித்து வரும் கண்டங்களுக்கு பதிலளித்த டாக்டர் ஆர்.கே. சிங், ”ஊசி போடுவதற்கு முன்பு பெண் நோயாளியை கட்டுப்படுத்தி படுக்கையில் பொருத்த வேண்டும் . அதைத்தான் அவர் செய்தார். அப்படி செய்து , ஊசி போட்ட பிறகுதான் அந்த பெண் அமைதியானாள், பின்னர் அவளுடைய குடும்ப உறுப்பினர்கள் வந்ததும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் “ என தெரிவித்துள்ளார்.
என்னதான் நோயாளி கட்டுப்பாட்டை இழந்து ஆர்ப்பாட்டம் செய்தாலும் , செவிலியர்கள் அவர்களிடம் அன்பாக நடந்துக்கொள்ள வேண்டுமே தவிர , மற்ற நோயாளிகளை பயமுறுத்தும் வகையில் தாக்குதலிலோ அல்லது தலைமுடியை பிடித்து கட்டாயப்படுத்தும் வகையில் நடந்துக்கொள்வதோ முறையானது அல்ல என நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.