உத்தரபிரதேசத்தில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியிடம், "உங்கள் வீடு எங்கே இருக்கிறது, நீங்கள் எங்கு செல்ல வேண்டும்?" என்று தொலைபேசியில் கேட்டதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


தீபாவளிக்கு முந்தைய நாள் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த இடைநீக்க உத்தரவை அம்பேத்கர் நகர் காவல்துறை தலைவர் அன்றே பிறப்பித்துள்ளார். மூன்று காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை காவல்துறை தலைவர் உறுதி செய்துள்ளார்.


அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் சிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்பேத்கர் நகர் மாவட்டத்திற்குச் சென்றிருந்தபோது, ​​அந்த மூன்று காவலர்களும் அவரின் பாதுகாப்புப் பணிக்காக போடப்பட்டுள்ளனர். அந்த சமயத்தில், நீதிபதியிடம் அவர்கள் நேரிடையாக தொலைபேசியில் பேசியுள்ளனர். நீதிபதியின் வீடு எங்கு இருக்கிறது, அவர் எங்கு செல்ல வேண்டும் என நேரடியாக போனில் கேட்டுள்ளனர்.


 






சம்பவத்தை விரிவாக விவரித்துள்ள அம்பேத்கர் நகர் மூத்த காவல்துறை அதிகாரி சுரேஷ் குமார் மிஸ்ரா, "நீதிபதி கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். இது காவல்துறை கண்காணிப்பாளருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் சம்பந்தப்பட்டவர்களை சஸ்பெண்ட் செய்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டார்" என்றார்.


நீதிபதியிடம் காவல்துறை அதிகாரிகள் நேரடியாக கேள்விகளை கேட்டிருக்கக் கூடாது என்றும் நீதிபதி எங்கு செல்ல வேண்டும் போன்ற விவரங்களை நீதிபதியின் பாதுகாப்பு அதிகாரியிடம் கேட்டிருக்க வேண்டும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. நீதிபதியின் எண், போலீஸாருக்கு எப்படி கிடைத்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.


பாதுகாப்பு விவகாரங்களில் சில நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அரசின் உயர் பதவியில் உள்ளவர்களின் பாதுகாப்பு விவகாரங்களில் காவல்துறையினர் சில விதிகளை பின்பற்ற வேண்டியிருக்கிறது. 


இப்படி எல்லாம், நீதிபதிக்கு நேரடியாக போன் செய்து அவர்கள் எங்கு செல்ல வேண்டும் என்பதை எல்லாம் கேட்பது விதிகளுக்கு புறம்பானது என கருதப்படுகிறது. குறிப்பிட்ட, நீதிபதியின் அரசு அதிகாரியிடம் இது போன்ற தகவல்களை பெற்று, அதன்படி செய்லபடுவதே விதியாகும்.