போபால் மற்றும் புது தில்லி இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் பிரதமர் ராணி கமலாபதி புது தில்லி வந்தே பாரத் - எக்ஸ்பிரஸை ஆய்வு செய்தார். ரயிலில்  குழந்தைகள் மற்றும் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.


முதல் வந்தே பாரத் ரயிலைப் பெற்ற மத்தியப் பிரதேச மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். இந்த ரயில் டெல்லிக்கும் போபாலுக்கும் இடையிலான பயண நேரத்தைக் குறைக்கும் என்றும் தொழில் வல்லுநர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பல வசதிகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகளுடனான தனது உரையாடலைப் பற்றிப் பேசிய பிரதமர், குழந்தைகளின் ரயில் மீதான ஆர்வத்தையும் உற்சாக உணர்வையும் குறிப்பிட்டார். "ஒரு வகையில், வந்தே பாரத் இந்தியாவின் உற்சாகம் மற்றும் உற்சாகத்தின் சின்னம். இது நமது திறமைகள், நம்பிக்கை மற்றும் திறன்களை பிரதிபலிக்கிறது", என்றார்.



இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. டெல்லியில் இருந்து புறப்பட்டு கான்பூர் – அலகாபாத் வழியாக வாரணாசி வரையில் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு டெல்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா இடையே 2 வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது.


இதையடுத்து குஜராத் மாநிலம் காந்திநகர்-மும்பை இடையே 3வது வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது.  4-வதாக இமாச்சலப் பிரதேசம் உனாவின் அம்ப் அண்டவ்ரா - புதுடெல்லி இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. நாட்டின் 5ஆவதும், தென் இந்தியாவின் முதலாவதுமான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை கே.எஸ்.ஆர் ரயில் நிலையத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். இது மைசூரூ சென்னை இடையே இயங்கிவருகிறது. 


இந்நிலையில் நேற்று ராணி கமலாபதி ரயில் நிலையம், போபால் மற்றும் புது தில்லி ரயில் நிலையம் இடையே அறிமுகப்படுத்தப்படும் புதிய ரயில் நாட்டின் 11வது வந்தே பாரத் சேவை மற்றும் 12வது வந்தே பாரத் ரயில் ஆகும்.


வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நாட்டில் பயணிகள் பயண அனுபவத்தை மறுவரையறை செய்துள்ளது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி அதிநவீன பயணிகள் வசதிகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது ரயில் பயனாளர்களுக்கு வேகமான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்கும், சுற்றுலாவை மேம்படுத்துவதோடு பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.


வந்தே பாரத் ரயில் வேகத்திலும், சேவையிலும், சுத்தத்திலும் மற்றும் பாதுகாப்பிலும் மற்ற ரயில்களை காட்டிலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வந்தே பாரத் ரயில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரயில் ஆகும். வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்வதன் மூலமாக பயண நேரம் 25 சதவீதத்தில் இருந்து 45 சதவீதம் வரையிலும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.


டெல்லியில் இருநு்து வாரணாசி செல்லும் வந்தே பாரத் ரயில் வெறும் 8 மணி நேரத்தில் பயணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது மற்ற ரயில்களை காட்டிலும் 40 முதல் 50 சதவீதம் அதிக வேகம் ஆகும். வந்தே பாரத் ரயிலில் உள்ள ஒவ்வொரு பெட்டியிலும் தானியங்கி கதவுகள், இணைய வசதி, சொகுசான இருக்கை வசதி, கழிவறை வசதிகள் உள்ளது.


ஒவ்வொரு பெட்டியிலும் உணவுக்கூடம் இயங்கி உணவுகள், குளிர்பானங்கள் விநியோகிக்கப்படுகிறது. பயணிகளின் வசதிக்கு ஏற்ப வெப்பநிலையை மாற்றிக்கொள்ளலாம். ஒவ்வொரு வந்தே பாரத் ரயிலிலும் 1128 பயணிகள் பயணிக்க முடியும்.