வட இந்தியாவில் மழை தற்போது மிக அதிகளவில் பெய்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்ட்ரா, இமாச்சல பிரதேசம், குஜராத், டெல்லி என பல மாநிலங்களில் பெய்து வரும் மழையால் ஆங்காங்கே வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. பல இடங்களில் வெள்ளத்தில் கார்களும், விலங்குகளும் அடித்துச் செல்லப்பட்ட சம்பவமும் அரங்கேறி வருகிறது.


அடித்துச் செல்லப்பட்ட சிலிண்டர்கள்:


இந்த நிலையில், தற்போது குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் அந்த மாநிலமே ஸ்தம்பித்து உள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சரி மற்றும் ஜூனகர் பகுதிகள் தற்போது வெள்ளக்காடாக மாறியுள்ளது. அந்த மாவட்டங்களில் 943 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


இந்த நிலையில், கனமழையால் தத்தளித்து வரும் குஜராத்தில் மழைநீர் தேங்கி வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான சிலிண்டர்கள் அடித்துச் செல்லப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தெற்கு குஜராத்தில் அமைந்துள்ள நவ்சரியில் உள்ள ஜூனாதனா பகுதியில் சிலிண்டர் கேஸ் மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மையத்தில் நூற்றுக்கணக்கான சிலிண்டர்கள் இருப்பில் வைக்கப்பட்டு இருந்தது.






இந்த பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் இடுப்பளவிற்கு மழைநீர் தெருக்களில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள்ளும், குடியிருப்புகளுக்கும் புகுந்த மழைநீர் சிலிண்டர் கேஸ் மையத்தின் உள்ளேயும் புகுந்தது.


வெள்ளத்தில் மிதந்த எருமை மாடுகள்:


வௌ்ளமாக பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் சிலிண்டர்கள் தண்ணீரில் மிதக்கத் தொடங்கின. தண்ணீரில் மிதந்த சிலிண்டர்கள் வெள்ள நீரில் வெளியில் அடித்து தெருக்களில் அடித்துச் செல்லப்பட்டது. நூற்றுக்கணக்கான சிலிண்டர்கள் ஒரே நேரத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடித்துச் செல்லப்பட்ட சிலிண்டர்களின் நிலை என்ன என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.


அதேபோல, ஜூனாகர் பகுதியில் எருமைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோவும் வெளியாகியது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எருமைகளை தன்னார்வலர்கள் சிலர் மீட்டனர். வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் வெள்ளத்தால் வாடுவது அங்குள்ள மக்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது.


இந்திய வானிலை ஆய்வு மையம் குஜராத், மகாராஷ்ட்ரா மாநில மக்களுக்கு கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள பால்கர், தானே, ராய்கட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: "தூக்கு தண்டனை கொடுக்காவிட்டால் மனிதர்களே இல்லை" - மணிப்பூர் சம்பவம் குறித்து ஹர்பஜன் சிங்!


மேலும் படிக்க:  Manipur Violence: சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி உயிரோடு எரித்து கொலை.. மணிப்பூரில் மீண்டும் கொடூரம்..!