சமூக வலைதளங்களில் எப்போது விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக யானை,நாய் மற்றும் குரங்கு தொடர்பான வீடியோ என்றால் அது நிச்சயம் வைரலாகிவிடும். அந்தவகையில் தற்போது ஒரு குரங்கு ஒன்று செய்யும் சேட்டை வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.
இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் குரங்கு ஒன்று தனக்கு கிடைத்த முககவசத்தை அழகாக மாட்டிக் கொண்டு செல்கிறது. அதை திருப்பி எடுத்து பார்த்து கொண்டு மீண்டும் தன்னுடயை முகத்தில் மாட்டிக்கொண்டு செல்கிறது. இந்த வீடியோ பதிவிட்டு அவர், “அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்ள விருப்பப்படுகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.
இந்த வீடியோவை தற்போது வரை கிட்டத்தட்ட 1 லட்சம் பேருக்கு மேல் பார்த்து ரசித்து உள்ளனர். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். கொரோனா காலத்தில் நமக்கு ஒரு நல்ல பாடத்தை இந்த குரங்கு கற்று தருகிறது என்று பலரும் இந்த வீடியோ தொடர்பாக பதிவிட்டு வருகின்றனர்.
அதே சமயம் இப்படி பொறுப்பு இல்லாமல் பலர் தங்களின் முகக்கவசத்தை கீழே போடுவது மிகவும் அச்சம் தரும் விஷயமாக அமைந்துள்ளது என்று சிலர் பதிவிட்டு வருகின்றனர். ஏனென்றால் நாம் பயன்படுத்திய முகக்கவசத்தை ஒரு கவரில் போட்டு குப்பைகளில் போட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்படி நாம் செய்யாமல் விட்டால் அதிலிருந்து கூட நோய் பரவும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா காலத்தில் மத்திய மாநில அரசுகள் மக்களை முகக்கவசம் அணிந்துகொள்ள செய்ய பல விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் குரங்கு ஒன்று மத்திய மாநில அரசுகளுக்கு உதவும் வகையில் ஒரு விழிப்புணர்வு வீடியோவை தானாக செய்தது போல் அமைந்துள்ளது. இனியாவது நாம் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சரியாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்போம். மேலும் பயன்படுத்திய முகக்கவசங்களை பாதுகாப்பான முறையில் குப்பைகளில் கொண்டு சேர்ப்போம் என்ற உறுதியையும் ஏற்போம்.
மேலும் படிக்க: மணமகளே மணமகளே வா வா.. இனி இல்லை: வா... வந்து வண்டில ஏறு... மணமகனை காரில் அழைத்துச் சென்ற மணமகள்!