UAPA சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு போதி்ய மருத்துவ சிகிச்சைகள் மறுக்கப்பட்டு கைதியாகவே உயிரிழந்தார் பழங்குடியின போராளி ஸ்டான் சுவாமி. ஐ.நா. மனித உரிமை ஆணையம் உட்பட பல மனித உரிமை அமைப்புகள் இதை கடுமையாக கண்டித்தன.


ஸ்டான் சாமிக்கு ஏற்பட்ட நிலை, மாணவர் அமைப்பின் தலைவர் அத்தீக்குர் ரஹ்மானுக்கும் ஏற்படும் அபாயம் இருப்பதாக மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு அச்சம் தெரிவித்து உள்ளது. UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அத்தீக்குர் ரஹ்மானை மனிதாபிமான அடிப்படையில் உடனே விடுவிக்க வேண்டும் என அந்த கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.


சிறுவயதிலிருந்தே இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ள ரஹ்மான், அதற்கான மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டு வந்ததாகவும், சிறையில் அடைக்கப்பட்ட 10 மாதங்களாக அவர் எந்த மருந்துகளையும் எடுக்கவில்லை என்றும் அவரது தாய் மதீன் வேதனை தெரிவித்து உள்ளார்.


உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸில் பட்டியலின சிறுமி உயர்சாதியினரால் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற கேரள ஊடகவியலாளர் சித்திக் காப்பானுடன் ரஹ்மானும் UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ரஹ்மான் மீது போலீசார் தொடர்ந்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் மதுரா நீதிமன்றம் அவற்றை தள்ளுபடி செய்தது. இருப்பினும், கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் சிறையில் உள்ளனர்.


இந்தநிலையில், 10 மாதங்களாக சிறையிலிருக்கும் ரஹ்மான் இதய நோய்க்கு உண்டான மருந்துகளை உட்கொள்ளாததால் இதய செயலிழப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. இந்த நோய்க்காக முசாபர்நகர், மீரட், அலிகர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைகளில் அவர் சிகிச்சைபெற்றுள்ளார். ரஹ்மான் கைதாவதற்கு ஒரு மாதம் முன்பாக எய்ம்ஸ் மருத்துவர், இதய குழாய் மாற்று அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்ததாகவும் எனவே அவரை 60 நாட்கள் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கும்படி தாங்கள் ஒரு மனுவை தாக்கல் செய்ததாகவும், ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாகவும் அவரது தாய் கூறுகிறார்.


இதுகுறித்து தெரிவித்துள்ள ரஹ்மானின் வழக்கறிஞர் சைஃபான், “அவரது இதய நோய்க்கு சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என தாங்கள் வழங்கிய விண்ணப்பத்தை சிறை கண்காணிப்பாளர் செயல்படுத்தவில்லை. ரஹ்மானை டெல்லி எய்ம்ஸில் சிகிச்சைக்காக அனுமதிக்கக்கோரிய பரிந்துரையும் ஏற்கப்படவில்லை. எய்ம்ஸில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய 60 நாட்கள் பரோல் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் மதுரா நீதிமன்றம் நிராகரித்தது.


எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் சுதா பரத்வாஜுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை மற்றும் இடைக்கால மருத்துவ ஜாமீன் கோரும் மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், கைதிகள் மருத்துவ சிகிச்சை பெறவும், மருந்துகளை உட்கொள்ளவும் உரிமை உண்டு என்றும், இது அனைத்து கைதிகளுக்கும் பொருந்தும் என்றும் கூறுகிறது. ஆனால் ரஹ்மானுக்கு மறுக்கப்படுகிறது” என்கிறார்.


”ஹத்ராசுக்கு பல முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் ஒற்றுமையைக் காட்ட வருகை தந்தனர். ஆனால், அங்கு வந்த இஸ்லாமியர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டனர். ரஹ்மானும் இஸ்லாமியர் என்ற காரணத்துக்காகவே கைது செய்யப்பட்டு உள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்க சென்றவரை பொய்யான வழக்கில் கைது செய்துள்ளனர்.” என குற்றம்சாட்டுகிறார் அவரது தாய் மதீன்.


கடைசியாக கடந்த ஜூன் மாதம் ரஹ்மான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டது. மீரட்டில் உள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் P.hd படித்து வந்த ரஹ்மான், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (சிஎஃப்ஐ) மாணவர் அமைப்பின் தலைவராக இருந்து வந்தார்.