நாம் அனைவருமே ரயில் நிலையங்களில் அடிக்கடி ராணுவ வீரர்களைப் பார்ப்போம். விரைப்பாக, ஃபிட்டாக செல்லும் அவர்களை ஒரு நிமிடம் வேடிக்கைப் பார்த்துவிட்டு நம் பணியைத் தொடர்வோம். ஆனால் சிறுமி ஒருவர் ராணுவ வீரரின் காலைத் தொட்டு வணங்கிய செயல் நெட்டிசன்களை உருக வைத்துள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், மத்திய அமைச்சர்கள் பலரும் சிறுமிக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வீடியோவில் சிறுமி ஒருவர் சில ராணுவ வீரர்களை நோக்கி ஓடுகிறா. அவர் வருவதைப் பார்த்து ஒரு வீரர் சிறுமியிடம் குனிந்து பேச முற்படுகிறார். ஆனால் அதற்குள் சிறுமி அந்த வீரரின் காலைத் தொட்டு வணங்குகிறார். அதனால் நெகிழ்ந்து போன அந்த வீரர், அந்தச் சிறுமியின் தனது கைகளை வைத்து தடவி ஆசிர்வாதம் செய்கிறார்.
இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்த நெட்டிசன் ஒருவர், சிறுமியின் பெற்றோரை வெகுவாகப் பாராட்டியுள்ளார். குழந்தையை சரியாக வளர்த்துள்ளதாக பாராட்டியுள்ளார். குழந்தைகளுக்கு இந்திய மதிப்பீடுகளையும் பாரம்பரியத்தையும் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த மகளுக்கு எனது பாராட்டு. குடும்பத்திற்கு எனது நன்றிகள். குழந்தைக்கு சிறந்த பண்புகளை கூறி வளர்த்துள்ளனர் என்று பதிவிட்டுள்ளார்.
மக்களவை எம்.பி. பிசி மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் சிறு வயதிலிருந்தே நாட்டுப்பற்றை ஊட்டுவதே இந்த தேசத்திற்கு ஒவ்வொரு பெற்றோரும் செய்யும் கடமை என்று கூறியுள்ளார்.