மாநிலமே இணைய சேவை வழங்குவதன் மூலம் இந்தியாவிலேயே முதல் மற்றும் ஒரே மாநிலமாக கேரளா உருவெடுத்திருப்பதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

அனைவருக்கும் இணைய சேவை:

கேரளாவில் உள்ள அனைத்து மக்களும் இணைய சேவை பெறவேண்டும் என்ற நோக்கத்தில், தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பின் ஒரு பகுதியாக கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட் ஒர்க் லிமிட்டெட் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. இணைய சேவை வழங்குவதற்கான உரிமத்தை இந்த நிறுவனத்திற்கு  மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் வழங்கியுள்ளது. இதனயடுத்து இணய சேவையை அரசே வழங்கும் முதல் மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது.

Continues below advertisement

பினராயி விஜயன் ட்வீட்:

இது குறித்து ட்வீட் செய்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், "அரசே இணைய சேவை வழங்கும் முதல் மாநிலமாக கேரளா  இந்தியாவில் உருவெடுத்துள்ளது. தி கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் லிமிட்டெட்டிற்கு சேவை வழங்குவதற்கான உரிமத்தை மத்திய தொலை தொடர்பு அமைச்சகம் வழங்கியுள்ளது. தற்போது நமது KFON திட்டத்தை தொடங்கலாம். இதன் மூலம் இணைய சேவை நமது மக்களுக்கு அடிப்படை உரிமையாகிறது" என்று கூறியிருக்கிறார். வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 20 லட்சம் குடும்பங்களுக்கும், அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், ஆட்சியர் அலுவலகங்கள், தலைமைச்செயலகம் உள்ளிட்ட 30,000 அரசு அலுவலகங்களுக்கும் இத்திட்டத்தின் மூலம் இலவச இணைய சேவை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 70000 இணைப்புகள்:

இத்திட்டத்தின் முதற்கட்டமாக ஒரு தொகுதிக்கு 500 இணைப்புகள் வீதம், கேரளாவில் உள்ள `140 தொகுதிகளுக்கும் சேர்த்து 70000 இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் 100 பேர் என்ற வீதத்தில் 14 ஆயிரம் பேரை அரசு இதுவரை தேர்வு செய்துள்ளது. பயனாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான பொறுப்பு உள்ளாட்சி துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவர்கள் பயனாளர்களைக் கண்டறிந்து அந்தப் பட்டியலை இணைய சேவை வழங்குநர்களிடம் ஒப்படைப்பார்கள்.

ரூ.1548 கோடி ஒதுக்கீடு:

முன்பு கேரளாவில் ஆட்சியில் இருந்த பினராயி விஜயன் தலைமையிலான அரசு இத்திட்டத்திற்காக கடந்த 2019ம் ஆண்டு 1,548 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது. இத்திட்டத்திற்காக இதுவரை 35 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு ஃபைபர் கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.