மேற்கு வங்க தலைமை செயலக முற்றுகை போராட்டத்தை தடுக்க முயன்ற காவல்துறையினரை , பாஜகவினர் சரமாரியாக தாக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய் கிழமையன்று கொல்கத்தாவின் மேற்கு வங்க பகுதியில் உள்ள நபன்னா தலைமை செயலகத்தை முற்றுகையிட பாஜாகவினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொடி மற்றும் முழக்கங்களுடன் கிளம்பினர். மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தின் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மினா தேவி புரோகித் மற்றும் ஸ்வபன் தாஸ்குப்தா ஆகியோரது தலைமையில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சூழலில் பாதுகாப்பு நலன் கருதி காவல்துறை குவிக்கப்பட்டனர். ஆனால் தடுப்புகளை தாண்டி , பாஜகவினர் அத்துமீறியதால் போலீசார் தடுக்க முயன்றுள்ளனர். இதில் பேரணியை வழிநடத்திய தலைவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டதாக பாஜகவினர் குற்றம் சாட்டுகின்றனர். எனவே கையில் பாஜக கொடிகளை ஏந்தியபடி , நீளமான குச்சிகளை கொண்டு அந்த பகுதியில் வந்த காவலர்களின் மீது பேரணியில் ஈடுபட்டவர்கள் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேற்க்கண்ட வீடியோவில் காவலர் ஒருவரை சுற்றி வளைத்த பாஜகவினர் , அவரை சரமாரியாக தாக்குகின்றனர். அவர் காவல் உதவி ஆணையர் என கூறப்படுகிறது. அங்கிருந்து முன்னேற முயற்சிக்கும் காவல் அதிகாரியை தாக்கிய வண்ணம் பாஜகவினர் பின் தொடர்வதை காணலாம். அவர் தனது ஹெல்மெட்டால் தலையை பாதுக்காக்க முயற்சிக்கிறார். சீருடையில் இருக்கும் காவல் அதிகாரியை விடாப்பிடியாக தொடர்ந்து அவரை தாக்கும் பாஜகவினர் கீழே தள்ளிவிட்டு கொடூரமாக தாக்குகின்றனர். இதனையடுத்து அங்கு வந்த சிலர் காவலரை மீட்டு அங்கிருந்து அழைத்துச்செல்வதை காண முடிகிறது. கொல்கத்தா காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் “ போலீஸ்காரகளுக்குத்தான் பலத்த காயமே தவிர , போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவருக்கு கூட காயமில்லை “ என்கிறார்.
சீருடையில் இருக்கும் ஒரு காவலரை பாஜவினர் இவ்வளவு கொடூரமாக தாக்குவது ஏற்புடையத்தல்ல என சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதேபோல ஹவுரா மாவட்டத்தில் உள்ள சந்த்ராகாச்சியில் போராட்டக்காரர்களை விரட்டியடித்த போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.இந்த போராட்டத்தில் பல பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.மேற்கு வங்க சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, ஹூக்ளி எம்பி லாக்கெட் சட்டர்ஜி, மூத்த தலைவர் ராகுல் சின்ஹா மற்றும் பல தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் அனுப்பப்பட்டனர். தடுப்புகளை தாண்டி பாஜகிவினர் , போராட்டத்தை தொடர்ந்ததால் பல இடங்களில் கண்ணீர் புகை குண்டுகள்மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தி போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர்.
திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே தனது ட்விட்டர் பதிவில், “கலவரத்தைத் தூண்டும் பாஜகவின் முயற்சியை முறியடித்த கொல்கத்தா காவல்துறையை நான் பாராட்டுகிறேன். அடுத்த முறை வங்காளத்தில் அமைதியை சீர்குலைப்பது, போலீசாரை தாக்குவது அல்லது பொது சொத்துக்களை சேதப்படுத்துவது போன்றவற்றை நினைத்தால் கூட பாஜக பயந்து நடுங்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் இருந்து திங்களன்று 'நபன்னா' முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க 7 ரயில்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.