புதிதாக அமைக்கப்பட்ட கடமைப் பாதையில் 90 ஐஸ் வண்டிகள், 30 தண்ணீர் வழங்கும் இயந்திரங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் கட்டும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்தக் கட்டட பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து சென்ட்ரல் விஸ்டா என்ற நாடாளுமன்ற வளாகத்தையும், புனரமைக்கப்பட்ட ராஜபாதையையும் பிரதமர் மோடி அண்மையில் திறந்து வைத்தார். அத்துடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நேதாஜி சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து இந்தியா கேட் பகுதி வரை இருக்கும் சாலைக்கு ராஜ்பாத் என்று பெயரிடப்பட்டிருந்தது. இந்தப் பாதையை புனரமைக்க மத்திய அரசு முடிவு எடுத்திருந்தது. அத்துடன் இதன் பெயரையும் மாற்றியமைக்க முடிவு செய்திருந்தது. அதன்படி தற்போது ராஜ்பாத் என்ற பெயரை கடமை பாதை என்று மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. இதற்கான தீர்மானம் டெல்லி மாநாகராட்சியிலும் நிறைவேற்றதை அடுத்து பெயர் மாற்றம் நடந்தது. இதை இந்தியில் கர்த்தவ்ய பாத் என்று அழைக்கின்றனர்.
இந்த கடமை பாதையில் பல்வேறு சிறப்பம்சங்களும் இடம்பெற்றுள்ளன. அந்தப் பகுதியில் அழகுப்படுத்தப்பட்ட நிலப்பரப்புகல், நடைபாதைகள் கொண்ட புல்வெளிகள், பசுமையான இடங்கள், புதுப்பிக்கப்பட்ட கால்வாய்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இவை தவிர நடந்து செல்பவர்களின் வசதிக்காக சுரங்கப் பாதைகள், மேம்படுத்தப்பட்ட பார்க்கிங் வசதிகள் மற்றும் புதிய கண்காட்சி தளங்கள் மற்றும் இரவு விளக்குகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. திடக்கழிவு மேலாண்மை, மழை வெள்ளம் தொடர்பான மேலாண்மை, தண்ணீரை மறுசுழற்ச்சி செய்யும் வசதி, மழை நீர் சேகரிப்பு வசதி, ஆற்றல் திறன் கொண்ட விளக்குகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்தியா கேட் பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போசின் கிரானைட் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை ஒரே கிரானைட் கல் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை 28 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் பங்கை குறிக்கும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தான் கடமை பாதையில் 90 ஐஸ் வண்டிகள், 30 தண்ணீர் வழங்கும் இயந்திரங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில், கடமைப் பாதை, சென்ட்ரல் விஸ்டா பாதைகளில் ஆறு இடங்களை விற்பனை புள்ளிகளாக தேர்வு செய்துள்ளோம். ஒவ்வொரு விற்பனை புள்ளியிலும் 15 ஐஸ் வண்டிகள் அனுமதிகப்படுகின்றன. அந்த வகையில் மொத்தம் 90 ஐஸ் வண்டிகள் இங்கே இருக்க முடியும். அதேபோல் 30 தண்ணீர் வழங்கும் இயந்திரங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுப்பட்ட 6 இடங்களின் பெயர்களையும் பொதுவெளியில் குறிப்பிட்டுள்ளோம். C-ஹெக்சகன் சாலையின் தெற்கிலும், C-ஹெக்சகன் சாலையின் வடக்கிலும், மன் சிங் சாலையில் தெற்கில் இருபுறங்களிலும், ராஃபி அகமது சாலையின் தெற்கேவும், ராஃபி அகமது சாலையின் வடக்கேவும் விற்பனை புள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.