சத்யேந்தர் ஜெயின் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட திகார் சிறை கண்காணிப்பாளர் அஜித் குமாரை அவரது சிறை அறைக்குள் சந்தித்ததைக் காட்டும் புதிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஜெயினுக்கு "சிறப்பு சிகிச்சை" வழங்குவதில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட குமார் இந்த மாத தொடக்கத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.






டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி தொடர்பாக சத்யேந்திர ஜெயின் குடும்பத்தினர் மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்களில் ரூ.4.51 கோடியை அமலாக்கத்துறை சமீபத்தில் முடக்கியது. பரிவர்த்தனை மோசடி தொடர்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்நிலையில் சத்யேந்திர ஜெயினை அமலாக்கத்துறை மே மாதம் கைது செய்தது.


சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா, பொய்யான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இமாச்சல் பிரதேசத்தில் மாநில தேர்தல் நடைபெற உள்ளதால், ஆம் ஆத்மி கட்சியின் மீது தவறான எண்ணத்தை உருவாக்கும் நோக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது. இமாச்சல சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற எண்ணம் பாஜகவிற்கு வந்து விட்டது. அதனால் தான் இத்தகைய மறைமுக தாக்குதலை எதிர்க்கட்சியின் மீது பாஜக தொடுக்கிறது. இதே போன்று தான் அமலாக்கத்துறை, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சத்யேந்திர ஜெயினை விசாரணை செய்தது. ஆனால் அப்போது எதுவும் கண்டறிய முடியாததால் விடுதலை செய்தது. தற்போது தேர்தல் வருவதையொட்டி, இது போன்ற பொய்யான வழக்கில் கைது செய்யும் நடவடிக்கைகளில் பாஜக ஈடுபடுவதாக மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். 


முன்னதாக  சத்யேந்திர ஜெயினுக்கு திகார் சிறையில் 'மசாஜ்' செய்யப்படும் இரண்டு விடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன. இதனை தொடர்ந்து சத்யேந்திர ஜெயினை விஐபி போல நடத்தியதற்காக டெல்லி திகார் சிறையின் கண்காணிப்பாளர் அஜித் குமார்  நீக்கம் செய்யப்பட்டார்.


சத்யேந்திர ஜெயினின் வீடியோ வெளியானதை அடுத்து பாஜக, ஆம் ஆத்மி கட்சியை தாக்கத் தொடங்கியுள்ளது. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவருக்கு பிசியோதெரபி செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்றும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்தபோதிலும் பா.ஜ.க தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.


இந்நிலையில் டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய திகார் சிறை நிர்வாகத்திற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் அளிக்கப்படும் உணவு குறித்தும் அவரது உடல்நிலை குறித்தும் நவ.28ம் தேதிக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு திகார் சிறை நிர்வாகத்திற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தற்போது மீண்டும் சத்யேந்திர ஜெயின் இடைநீக்கம் செய்யப்பட்ட சிறை கண்காணிப்பாளரை சந்திப்பது போன்ற வீடியோ காட்சி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.