ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவம் நிகழ்ந்தேறி உள்ளது. குடும்ப தகராறால் தனது 7 மாத குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற பெண் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார், ஆனால் குழந்தை இறந்து போன சோகமான சம்பவம் ஹைதராபாத்தின் ஹயாத்நகரில் நடந்தேறி உள்ளது. கொரோனா நோய் தொற்று வந்த பிறகு நேரடியாக இறந்தவர்கள் பட்டியல் பார்க்கவே நெஞ்சம் பதபதைக்கிறது. ஆனால் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளாலும், அந்த விளைவுகளின் விளைவுகளாலும் ஏற்படும் மரணங்கள் தொடர்பான எண்ணிக்கைகள் நம்மிடம் இல்லை, ஆனால் தினந்தோறும் செய்தித்தாளில் அதைத்தான் படிக்கிறோம். கொரோனா கால வேலை இழப்பு நிறைய குடும்பத்தின் அமைதியை சீர்குலைத்துள்ளது, அதனால் கணவன் மனைவி இருவருக்குள்ளும் பிரச்சனைகள் வர தொடங்குகின்றன. அது ஒரு கட்டத்தை எட்டும்போது, மிகவும் கொடூரமான செயல்களில் சென்று முடிகிறது. அப்படி ஒரு சம்பவம்தான் ஹைதராபாத்தில் நிகழ்ந்தது.



தற்கொலை முயற்சி செய்த பெண்ணின் பெயர் சுவர்ணா ரமாவத் என்று அறியப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொள்வதற்காக தன் மீதும் தன் 7 மாத குழந்தை மீதும் சானிடைசரை ஊற்றிக்கொண்டு தீ வைத்து கொண்டுள்ளார். தாய் உடல் முழுவதும் தீப்பற்றாமல் உடலெங்கும் காயங்களுடன் மருத்துவமனையில் முதலுதவி செய்தவுடன் பிழைத்துக்கொண்டார். ஆனால் 7 மாதமே ஆன அவரது ஆண் குழந்தை கண்ணையா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் ஹயாத்நகர் காவல் நிலையத்தில் இது குறித்த வழக்கு பதியப் பட்டுள்ளது என்று தெரிகிறது.



தற்கொலை முயற்சிக்கு காரணம் என்னவென்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அறிக்கையின் கூற்றுப்படி, சுவர்ணா ரமாவத் என்னும் தற்கொலை முயற்சி செய்த பெண்ணை தினக்கூலி செய்யும் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். அவர் பெயர் வெங்கடேஷ் ரமாவத். இவர் கொரோனா தோற்றால் வேலை இல்லாமல் இருந்து வருகிறார். சுவர்ணா தனது கணவர் வெங்கடேஷ் உடன் ஹயாத்நகரில் வசித்து வந்துள்ளார். தினமும் சிறிய சிறிய பிரச்சனைகளுக்கு எல்லாம் இருவருக்கு இடையிலும் சண்டை நடந்து உள்ளது. முக்கியமாக வேலையின்மையால் பொருளாதார தட்டுப்பாடு காரணமாக இருவரின் இடையிலும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. ஆனால் ஜனவரி 11 ஆம் தேதி சண்டை மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. கணவர் வெங்கடேஷ் கோபத்தில் ஒரு பாட்டிலை அடித்து உடைத்துள்ளார். பின்னர் கோபம் தாளாமல் வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார். அவர் வெளியே சென்ற நேரத்தில் தான் சுவர்ணா குழந்தையை இணைத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மருத்துவ அறிக்கைகளின்படி குழந்தை 70 சதவிகிதம் தீயில் எரிந்துள்ளது என்றும் தாய் சுவர்ணா 40 சதவிகிதம் எரிந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்க்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050