சமீப காலமாக, நீதித்துறைக்கும் மத்திய அரசுக்கும் இடையே உரசல் போக்கு நீடித்து வருகிறது. குறிப்பாக, நீதிபதிகள் நியமன விவகாரத்தில் நீதித்துறை மீது மத்திய அரசு விமர்சனங்களை மேற்கொண்டு வருகிறது.
அதன் உச்சக்கட்டமாக, நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் அமைப்பு வெளிப்படை தன்மையற்று இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
கொலீஜியம் அமைப்புக்கு முடிவு கட்டும் வகையில் கடந்த 2015ஆம் ஆண்டே நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும் சமமான அதிகாரம் வழங்கும் தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. ஆனால், அந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஆணையத்தை கலைத்தது.
கடந்த டிசம்பர் 7ஆம் தேதி, மாநிலங்களவை தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கர், இதை மேற்கோள் காட்டி பேசினார். "முறையான சட்டப்பூர்வ அரசியலமைப்பு உத்தரவை நீதித்துறை ரத்து செய்தது ஜனநாயக வரலாற்றில் இதுவரை நடந்திராத சம்பவம்" என்றார்.
இந்நிலையில், நீதித்துறை மீது மீண்டும் விமர்சனம் வைத்துள்ளார் குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கர். கடந்த 1973ஆம் ஆண்டு, கேசவனந்த பாரதி வழக்கில் வழங்கப்பட்ட வரலாற்று தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பிய அவர், "இது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
அரசியலமைப்பை திருத்தும் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை யாரேனும் கேள்வி எழுப்பினால், நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என் சொல்வது கடினமாக போய்விடும்" என்றார்.
"இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியையும் திருத்துவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருந்தாலும், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்றவோ அல்லது அழிக்கவோ இந்த அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது" என கேசவனந்த பாரதி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தேசிய நீதித்துறை நியமன ஆணைய சட்டத்தை ரத்து செய்தது குறித்து பேசியுள்ள தன்கர், "அரசியலமைப்பை திருத்தம் செய்யலாம். ஆனால், அடிப்படை கட்டமைப்பை மாற்ற முடியாது என்ற கேசவனந்த பாரதி வழக்கின் தீர்ப்புக்கு நான் ஆதரவு தெரிவிக்க மாட்டேன்.
இந்த அடிப்படை கட்டமைப்பை திருத்த முடியாது என்ற தீர்ப்பு, நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்படும் பல அரசியலமைப்பு திருத்தங்களை ரத்து செய்வதற்கான அடிப்படையாகிவிடுகிறது.
ஜனநாயகம் உயிர்வாழ்விற்கு நாடாளுமன்ற இறையாண்மை மற்றும் சுயாட்சி ஆகியவை இன்றியமையாதது. நிர்வாகத்துறையும் நீதித்துறையும் இதில் சமரசம் செய்வதை அனுமதிக்க முடியாது" என்றார்.