Mahua Moitra: டீக்கடையில் டீ போட்டு கொடுக்கும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கித்தில் பகிர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி  மஹுவா மொய்த்ரா பிரதமர் மோடியை கிண்டலாக சீண்டியுள்ளார். 


திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா புதன்கிழமை (ஜனவரி, 11) சாலையோரக் கடையில் டீ தயாரிக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற இந்த சம்பவ தற்போது இணையத்தில் வைரலான வீடியோவாக மாறியுள்ளது. 


அந்த வீடியோவில், திரிணாமுல் கட்சியின் எம்.பி ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைச் சேர்ப்பதைக் காணலாம்,  அப்போது அவரைச் சுற்றி ஒரு கூட்டம் கூடுகிறது. 


"டீ தயாரிப்பதை முயற்சித்தேன்... அது என்னை எங்கு அழைத்துச் செல்லும் என்று யாருக்குத் தெரியும் :-)," என்று திரிணாமுல் எம்.பி தனது பதிவில் கேப்ஷனாக இட்டுள்ளார்.


திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி  மஹுவா மொய்த்ரா தனது வீடியோவுக்கு இட்டுள்ள கேப்ஷன்  "சாய்வாலா " என்று அழைக்கப்படும் பிரதமர் நரேந்திர மோடியைக் குறிப்பதாக சமூக ஊடகங்களில் பலர் பதிவிட்டும், மஹுவா மொய்த்ராவின் பதிவுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.


அதில் ஒருவர், " நாட்டிற்கு ஒரு சாய்வாலா போதுமானது” என்று ஒருவர் ட்வீட் செய்துள்ளார். "மஹுவா மேடம் இந்தியாவின் இரண்டாவது பெண் பிரதமராகும் பாதையில் இருக்கிறார்" என்று மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார்.






திரிணாமுல் எம்.பி., கிருஷ்ணாநகரில் உள்ள தனது உள்ளூர் தொகுதியில், 'திதிர் சுரக்ஷா கவாச்' (திதியின் பாதுகாப்புக் கவசம்) என்ற தனது கட்சியின் புதிய வெகுஜன பிரச்சாரத்திற்காக சென்று இருந்தார். அப்போது இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டு பகிரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஊரகத் தேர்தலுக்கு முன்னதாக ஜனவரி 11 ஆம் தேதி தொடங்கி 60 நாட்களில் மாநிலத்தின் சுமார் 10 கோடி மக்களைச் சென்றடைவதை இந்த பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


பாராளுமன்றத்தில் உள்ள எதிர்கட்சி எம்.பிக்களில் மிகவும் ஆக்ரோஷமான எம்.பிக்களில் மிகவும் முக்கியமானவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மஹுவா மொய்த்ரா. இவரது கேள்விகளுக்கு பாராளுமன்றத்தில் சரியான பதில் சொல்ல முடியாமல் திணறும் மத்திய அமைச்சர்கள் தான் அதிகம். இந்நிலையில், மஹுவா மொய்த்ராவின் இந்த பதிவு பாஜக வட்டாரத்தில் பெரும் கோபத்தினை மூட்டியுள்ளது எனலாம். பிரதமர் மோடி முதன் முதலில் அதாவது 2014 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னின்று பிரச்சாரம் செய்யும்போது, தான் டீ கடையில் வேலை பார்த்ததாக கூறினார். இதனை பல நேரங்களில் எதிர் கட்சியினர் சாடிப் பேசியுள்ளனர். அதன் ஒரு பகுதியாகத்தான் மஹுவா மொய்த்ராவின் பதிவு உள்ளது.