வளர்ந்த இந்தியா என்பது இனி கனவு அல்ல எனவும் அது உறுதியான இலக்கு என்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். வரும் 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை அடைவதை உறுதி செய்ய நாம் உறுதியுடன் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.


ஹரியானாவின் குருஷேத்ராவில் நடைபெற்ற சர்வதேச கீதா மஹோத்சவ் 2024 நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா பொருளாதார முன்னேற்றத்தை அடைந்துள்ளதுடன், அபாரமான கட்டமைப்புகளை உருவாக்கி இருப்பதாக கூறினார்.


"ஒவ்வொரு குடிமகனுக்கும் வழிகாட்டி"


இந்தியாவின் குரல் உலக அரங்கில் இப்போது வலுவாக எதிரொலிக்கிறது என அவர் குறிப்பிட்டார். "பஞ்சாமிர்த மாதிரி" எனப்படும் ஐந்து அம்ச ஆட்சி முறையின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். ஆக்கபூர்வமான உரையாடல், நேர்மை, தன்னலமற்ற அர்ப்பணிப்பு, இரக்கம், பரஸ்பர மரியாதை ஆகிய ஐந்தும் அவசியம் என்றார்.


நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் சில சக்திகள் இந்தியாவின் பொருளாதாரத்தையும் நிறுவனங்களையும் பலவீனப்படுத்த திட்டமிட்டு முயற்சிக்கின்றன் என அவர் கூறினார். அவர்களின் நோக்கம் நமது அரசியலமைப்பு நிறுவனங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதும், முன்னேற்றத்திற்கான நமது பாதையை சீர்குலைப்பதுமே ஆகும் என அவர் கூறினார்.


குடியரசுத் துணைத் தலைவர் என்ன பேசினார்?


இத்தகைய சக்திகளை அடையாளம் கண்டு எச்சரிக்கையுடன் செயல்பட்டு அவர்களின் திட்டங்களை முறியடிக்க வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார்.


"கருத்து வேறுபாடுகள் சர்ச்சையாக மாறக்கூடாது என்பதை ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான உரையாடல் நமக்குக் கற்பிக்கிறது. மக்கள் வித்தியாசமாக சிந்திப்பதால் வேறுபாடுகள் இயற்கையானது. நமது அரசியலமைப்புச் சபை கூட வேறுபாடுகளை எதிர்கொண்டது. ஆனால், அவை விவாதத்தின் மூலம் அவற்றைத் தீர்த்தன.


கீதையின் சாரத்தை ஏற்றுக்கொண்டு, நேர்மறையான எண்ணத்துடன் தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்குமாறு அனைவரையும் வலியுறுத்துகிறேன்" என ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். 


ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, ஹரியானா முதலமைச்சர் நயப் சிங் சைனி, சுவாமி ஞானானந்த் மகராஜ் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


இதையும் படிக்க: வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக!