உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் அடல் ஆரோக்கிய கண்காட்சி இன்று தொடங்கியது. இரண்டு நாள்களுக்கு நடைபெறும் கண்காட்சியின் தொடக்க நாளான இன்று சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டார். அப்போது தொடக்க உரையாற்றிய அவர், "அடுத்த 4, 5 ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய வல்லரசு நாடாக இந்தியா உருவெடுக்கும்" என நம்பிக்கை தெரிவித்தார்.


"மூன்றாவது பெரிய வல்லரசு நாடாக மாற குடிமக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்"


தொடர்ந்து விரிவாக பேசிய அவர், "ஜெர்மனி, ஜப்பானை பின்னுக்கு தள்ளி அடுத்த 4, 5 ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய வல்லரசு நாடாக இந்தியா உருவெடுக்கும். ஆனால், அதை அடைய, நாட்டின் குடிமக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்" என்றார்.


முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயை நினைவுகூர்ந்த குடியரசு துணைத் தலைவர், "அவரின் கொள்கைகளில் உறுதியாக இருந்தார். முக்கியமான பிரச்னைகளை கவனமாக கையாண்டார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இந்தியா இன்று அடைந்திருக்கும் நிலையைப் பார்த்து மிகவும் பெருமைப்பட்டிருப்பார்" என்றார்.


நாடு அடைந்த முன்னேற்றம் குறித்து பேசிய அவர், "இந்தியாவின் பொருளாதாரம் கனடா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளியுள்ளது. இன்று நாம் பொருளாதாரத்தில் உலகின் ஐந்தாவது பெரிய வல்லரசாக இருக்கிறோம். வரவிருக்கும் நான்கைந்து ஆண்டுகளில், ஜப்பானும் ஜெர்மனியும் நமக்குப் பின்னால் இருக்கும். இந்தியா உலகின் மூன்றாவது பெரிய (பொருளாதார) வல்லரசாகப் போகிறது.


இதற்கெல்லாம், நாம் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். எவ்வளவுதான் திறமை இருந்தும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் எதுவும் செய்ய முடியாது. நமது வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது" என்றார்.


1990 முதல் 1991 வரை சந்திரசேகர் அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சராக பதவி வகித்தவர் ஜெகதீப் தன்கர். அந்த நேரத்தில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் பேணி வந்த நல்லுறவு குறித்து பேசிய தன்கர், "கடந்த 1990இல் நான் மத்திய அமைச்சராக இருந்தேன். 


முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குறித்து உருக்கம்:


எங்கள் அரசுக்கு பாரதிய ஜனதாவின் ஆதரவு இருந்தது. ஒரு அமைச்சராக ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்குச் செல்லும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. ஐரோப்பாவில் 15 நாட்கள், வாஜ்பாயுடன் பயணம் செய்தேன். இப்போது, நான் அடல்ஜியை மிகவும் மிஸ் செய்கிறேன். கண்டிப்பாக அவரை மிஸ் செய்கிறேன்" என்றார்.


அடல் ஆரோக்கிய கண்காட்சியில் கலந்து கொள்ள வந்த குடியரசு துணைத் தலைவரை, துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக், முன்னாள் துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா, நாடாளுமன்ற உறுப்பினர் சுதன்ஷு திரிவேதி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நீரஜ் சிங் ஆகியோர் வரவேற்றனர்.