PM Modi's Roadshow: வாரணாசியில் பிரதமர் மோடி ரோட்-ஷோவில் ஈடுபட்ட போது, ஆம்புலன்சிற்காக அவரது வாகன அணிவகுப்பு வழிவிட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.


பிரதமர் மோடியின் வாரணாசி பயணம்:


பிரதமர் மோடி 2 நாள் பயணமாக வாரணாசி சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது 19 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான 37 திட்டங்களை வாரணாசி மற்றும் புரவாஞ்சல் பகுதிகளில் தொடங்கி வைக்க உள்ளார். இதில் சாலைகள், மேம்பாலங்கள், சுகாதாரம், மருத்துவம், காவல்துறை மேம்பாடு, ஸ்மார்ட் சிட்டி, நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்கள், ரயில்வே மற்றும் விமான நிலையங்கள் தொடர்பான திட்டங்களும் அடங்கும்.






ஆம்புலன்சிற்கு வழிவிட்ட பிரதமர் மோடி கான்வாய்:


இந்நிலையில், வாரணாசி வந்த பிரதமர் மோடி காரில் சென்று கொண்டிருந்தபோது, ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக வந்தது. உடனடியாக பிரதமரின் அணிவகுப்பு முழுவதுமாக சாலையில் ஒதுங்கி நிற்க, ஆம்புலன்ஸ் வேகமாக அந்த சாலையை கடந்து சென்றது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதி ஹிமாச்சல பிரதேச மாநிலம் காங்க்ராவில் நடைபெற்ற ஒரு பேரணியில் பங்கேற்று திரும்பும் போதும், ஒரு ஆம்புலன்சிற்காக தனது வாகன அணிவகுப்பை பிரதமர் மோடி நிறுத்தினார். இதேபோன்று, கடந்த ஆண்டு செப்டம்பர் 30 அன்று அகமதாபாத்தில் இருந்து காந்திநகருக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த ஆம்புலன்சிற்காகவும் பிரதமர் மோடியின் அணிவகுப்பு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மோடியின் பயண திட்டம்:


பயணத்தின் முதல் நாளில் (இன்று மாலை) காசி தமிழ் சங்கத்தின் இரண்டாம் பதிப்பை நமோ காட்டில்  பிரதமர் மோடிதொடங்கி வைக்கிறார். அதோடு, கன்னியாகுமரி மற்றும் வாரணாசி இடையே இயக்கப்படும் காசி தமிழ் சங்கமம் விரைவு ரயிலையும் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். டிசம்பர் 17-31 வரை நடைபெறும் காசி தமிழ் சங்கமத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து 1,400 பேர் பங்கேற்க உள்ளனர்.


இதில் கலை, இசை, கைத்தறி, கைவினைப் பொருட்கள், உணவு வகைகள் உடன்,  தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலிருந்தும் தனித்துவமான தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் ஒரு கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காசி தமிழ் சங்கமம் இலக்கியம், பண்டைய நூல்கள், தத்துவம், ஆன்மீகம், இசை, நடனம், நாடகம், யோகா மற்றும் ஆயுர்வேதம் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவுரைகள் அடங்கும். கூடுதலாக, கருத்தரங்குகள் புத்தாக்கம், வர்த்தகம், அறிவுப் பரிமாற்றம், கல்வியியல் மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் தொடர்பான விவாதங்களும் திட்டமிடப்பட்டுள்ளது.