சட்டவிரோதமாக கடத்தப்படும் போதை பொருள்களுக்கு இளைஞர்கள் அடிமையாவது, தொடர்ந்து அதிகரிக்கும் குற்றச் செயல்கள் ஆகியவை பஞ்சாப் மாநிலத்தின் முக்கியமான பிரச்னைகளாக கருதப்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணாததால்தான், பஞ்சாப் மாநிலத்தின் பிரதான கட்சிகளாக இருந்த காங்கிரஸ், அகாலி தளம் கடந்த தேர்தலில் தோற்றது. 


பஞ்சாப் மாநிலத்தின் தலையாய பிரச்னைகள்:


பஞ்சாபில் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக பகவந்த் மான் பதவி வகித்து வருகிறார். ஆட்சி பொறுப்பானது, இவரின் வசம் வந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு பிரச்னைகதளில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 


இந்த நிலையில், கடந்த 11 நாள்களாக அதிரடி என்கவுண்டர் சம்பவங்களில் பஞ்சாப் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, மோகா மாவட்டத்தில் இன்று காலை காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட மூன்று ரவுடிகளை காவல்துறை கைது செய்துள்ளது.


இதுகுறித்து மோகா மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ஹரிந்தர் சிங் கூறுகையில், "சம்பவ இடத்துக்கு வந்த குண்டர்கள் தங்கள் பைக்கை நிறுத்தச் சொன்னபோது தப்பிக்க முயன்றனர். ஆனால்,போலீசார் அவர்களைப் பின்தொடர்ந்தனர். பின்னர், அவர்கள் தங்கள் பைக்கை விட்டுவிட்டு பண்ணைக்குள் சென்று போலீஸை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.


தொடரும் என்கவுண்டர் சம்பவங்கள்:


துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து குண்டர்கள் சரணடைந்தனர். அவர்களில் ஒருவர் தப்பிக்க முயன்றபோது காயமடைந்தார். துப்பாக்கிச் சூட்டில் எந்த காயமும் ஏற்படவில்லை" என்றார். கைது செய்யப்பட்ட கும்பலிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பான விவரங்களை காவல்துறை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.


இதுபோன்று பஞ்சாபில் கடந்த 11 நாள்களில் 8 சம்பவங்கள் நடந்துள்ளது. காவல்துறை மீது தாக்குதல் நடத்தினால், அவர்கள் தக்க பதிலடி தருவார்கள் என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.


மொஹாலி மற்றும் பாட்டியாலாவில் நேற்று இரண்டு என்கவுண்டர் சம்பவங்கள் நடந்துள்ளன. மேலும் இரண்டு கார் திருடர்கள் மற்றும் கொலைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இரு சம்பவங்களில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மூவருக்கு காயம் ஏற்பட்டதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.