குறுகிய சுயநல இலக்கை கைவிட்டு, சமூகத்திற்காக, மனிதகுலத்திற்காக, தேசத்திற்காக ஒரு இலக்கைக் நிர்ணயித்து கொள்ளுமாறு மாணவர்களுக்கு குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவுறுத்தியுள்ளார். சமூகத்திற்காக உழைத்தவர்கள், சமூகத்திற்காக வாழ்ந்தவர்கள், சமூகத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களை மட்டுமே, இன்றும் நாம் நினைவில் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"கல்வி என்பது கடவுளின் பரிசு"
உத்தராகண்ட் மாநிலம் நைனிடாலில் உள்ள ஷெர்வுட் கல்லூரியின் 156-வது நிறுவுனர் தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், எப்போதும் தேசத்திற்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தேசியவாதத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மாணவர்களை கேட்டுக்கொண்டார். 5,000 ஆண்டுக்கால நாகரிகத்தை கொண்ட ஒரு தனித்துவமான தேசமான இந்தியாவின் குறைந்தபட்ச தகுதியானது அதுதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மிகக் குறைந்த செலவில் எளிய அணுகுமுறையில் தரமான கல்வியை வழங்க வேண்டியது எந்தவொரு ஜனநாயக நாட்டின் அடிப்படையாகும் என்றும் அவர் தெரிவித்தார். கல்வி என்பது கடவுளின் பரிசு என்றும், 1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் சமத்துவத்தை கல்வி மூலம் மட்டுமே சிறப்பாக பாதுகாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெற்றோர்களுக்கு துணை ஜனாதிபதி தன்கர் அட்வைஸ்:
சமத்துவமின்மை, அநீதி ஆகியவற்றை கல்வி மிகக் கடுமையாக எதிர்ப்பதாகவும், கல்வி மூலம் தான் நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் இதை செய்யப் போகிறீர்கள்" என்றும் அவர் கூறினார்.
பெற்றோர்கள் தயவுசெய்து உங்கள் குழந்தைகளை மன அழுத்தத்திற்கு ஆளாக்காதீர்கள். வாழ்க்கையில் அவர்களின் குறிக்கோள் என்ன என்பதை நீங்கள் தீர்மானிக்காதீர்கள் என்றும் குடியரசு துணைத்தலைவர் அறிவுறுத்தினார். அப்படி நடந்தால் நமக்கு விஞ்ஞானிகள், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், உலகையே வழிநடத்துவோர் எங்கே இருந்து கிடைப்பார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.