நாட்டின் தோட்டக்கலை விளைபொருள்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசின் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், பஞ்சாப் மாநில வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் தோட்டக்கலைத் துறையுடன் இணைந்து, கடந்த ஜூன் 23ஆம் தேதி பஞ்சாபில் உள்ள பதான்கோட்டிலிருந்து கத்தார் நாட்டின் தோஹா நகருக்கு ஒரு மெட்ரிக் டன் ரோஜா வாசனையுடன் கூடிய லிச்சிப் பழங்கள் அனுப்பி வைத்துள்ளது.
கத்தாருக்கு செல்லும் பதான்கோட் லிச்சி பழங்கள்:
கூடுதலாக, பதன்கோட்டிலிருந்து துபாய், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு 0.5 மெட்ரிக் டன் லிச்சிப் பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. லிச்சிப் பழங்களின் ஏற்றுமதி மூலம் நாட்டின் தோட்டக்கலை விளைபொருட்களுக்கு உலக அளவிலான சந்தை வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் வேளாண் விளைபொருள்களின் ஏற்றுமதி விவசாயிகளுக்கு வருவாயையும் சந்தை வாய்ப்புகளையும் கணிசமான அளவில் உயர்த்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்றுமதியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இந்தியா:
கடந்த 2023-24-ம் நிதியாண்டில் பஞ்சாபில் உற்பத்தி செய்யப்பட்ட லிச்சிப் பழங்கள் 71,490 மெட்ரிக் டன்களாக இருந்தது. இது, நாட்டின் மொத்த லிச்சி உற்பத்தியில் 12.39 சதவிகிதமாக உள்ளது. இதே காலகட்டத்தில், இந்தியா 639.53 மெட்ரிக் டன் லிச்சிப் பழங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக தேசிய தோட்டக்கலை வாரியம் தெரிவித்துள்ளது.
4,327 ஹெக்டேர் பரப்பளவில் லிச்சிப் பழங்கள் சாகுபடி செய்யப்பட்டு ஹெக்டேர் ஒன்றுக்கு 16,523 கிலோ மகசூல் ஈட்டப்பட்டுள்ளதாக அந்த வாரியத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 2024-25-ம் நிதியாண்டில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் ஏற்றுமதி 3.87 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது.
இது, முந்தைய ஆண்டைக் காட்டிலும் 5.67% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மாம்பழங்கள், வாழைப்பழங்கள், திராட்சைகள், ஆரஞ்சுகள் பழ வகைகளின் ஏற்றுமதியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் அதே வேளையில், செர்ரி, ஜாமூன் மற்றும் லிச்சிப் பழங்கள் தற்போது சர்வதேச சந்தைகளில் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.