மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையான கே. பி. ஏ. சி. இலலிதா இயற்கை எய்தினார். இவருக்கு, வயது 73.
இவர் காதலுக்கு மரியாதை (1997), இயக்குநர் மணிரத்தினத்தின் அலைபாயுதே (2000), காற்று வெளியிடை (2017) போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக, காதலுக்கு மரியாதை படத்தில் நடிகை சாலினியின் தாயாக நடித்து விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்.
1947இல் கேரளாவின் கே. அனந்தன் நாயர், பார்கவி அம்மா ஆகியோரின் ஐந்து குழந்தைகளில் மூத்தவராக பிறந்தார். மகேஷ்வரி என்பது இவரது இயற்பெயர். இவர் தனது 10 வயதில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். மேடையில் இவரது முதல் தோற்றம் கீதாயுடே பாலி என்ற நாடகத்தில் இருந்தது. பின்னர் இவர் கேரளாவில் ஒரு முக்கிய இடதுசாரி நாடக குழுவாக இருந்த கே. பி. ஏ. சியில் (கேரள மக்கள் கலைக் கழகம் - kerala people Arts club) சேர்ந்தார். கேரளாவில் பொதுவுடைமை கருத்துக்களை பரப்புவதில் இந்த அரசியல் அரங்கம் மிகவும் செல்வாக்கு செலுத்தியது.
மேலும், இவருக்கு "லலிதா" என்ற திரைப் பெயரும் வழங்கப்பட்டது. பின்னர் இவர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியபோது, லலிதா என்று அழைக்கப்படும் மற்றொரு நடிகையிடமிருந்து வேறுபடுவதற்காக கே. பி. ஏ. சி என்ற குறிச்சொல் இவரது திரைப் பெயரில் சேர்க்கப்பட்டது. இவர் கேரள சங்கீத நாடக அகாதமியின் தற்போதைய தலைவராக உள்ளார் .
தனது நடிப்பின் மூலம் பன்முகத் திறன்களை வெளிப்படுத்தும் நபராக விளங்கியவர். ஐந்து தசாப்தங்களாக நீடித்த ஒரு வாழ்க்கையில், இவர் 550க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரின் கலைபடைப்புத் திறனுக்கு பெருமை சேர்க்கும் வகையில், இரண்டு சிறந்த திரைப்பட துணை நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. மேலும், கேரள அரசின் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான விருதை நான்கு முறை பெற்றுள்ளார்.
மலையாள சினிமாவுக்கு இவரின் பங்கு அளப்பரியாதது. பல தலைமுறையினால் நினைவுக்கூரப்படும். கே.பி.ஏ.சி. லலிதாவின் குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றும் அவரது ரசிகர் பெருமக்களுக்கும் தென்னிந்தியத் திரைத்துறையினர் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, கல்லீரல் பிரச்னை தொடர்பாக லலிதா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். மேலும், கட்டுப்பாடற்ற நீரிழிவு பாதிப்பும் அவருக்கு இருந்து வந்தது. சில மாதங்களுக்கு உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக கூறப்பட்ட நிலையில், இன்று இயற்கை எய்தினார்.