கர்நாடகா ஹிஜாப் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த பெண் மனுதாரரின் குடும்ப உறுப்பினர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


முன்னதாக, கர்நாடக மாநிலத்தின் கல்விக்கூடங்களில் இசுலாமியப்பெண்கள் தங்களது மார்க்கத்தின்படி, உடை உடுத்தி வருவதற்கு கல்வி நிர்வாகம் தடைவிதித்தது. இதனையடுத்து, உடுப்பி மாவட்டத்தில் ஹிபாஜ் உடையுடன் வந்த ஆறு மாணவிகள் கல்லூரிக்குள் நுழைய முடியாதபடி தடுத்து நிறுத்தப்பட்டனர்.  இது, மிகவும் விவாதப்பொருளாக மாறியது. ஹிஜாப் விவகாரத்தில் கல்லூரி நிர்வாகத்தின் முடிவை அம்மாநில பாஜக வரவேற்றது. மேலும், சில தீவிர இந்துத்துவ அமைப்புகள் தங்களது அரசியல் ஆதாயத்திற்காக உடன் படிக்கும் சக மாணவர்களை ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போட வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. 


இதற்கிடையே, தங்களது மார்க்கத்தின்படி, உடை உடுத்தி வருவதற்கு கல்வி நிர்வாகம் அனுமதி அளிக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்ட ஆறு மாணவிகள் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த, மனு மீதான விசாரணை கடந்த 8 நாட்களாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், மாணவர்கள் தங்கள் மார்க்கத்தின்படி, உடை உடுத்தி வருவதற்கு கல்வி நிர்வாகம் விதித்த தடையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. 






இந்நிலையில், மனுதாரர்களின் ஒருவரான 'Hazra Shifa' என்ற மாணவியின் குடும்ப உறப்பினர்களை சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த கும்பல் வன்முறையாளர்கள் தாக்கியுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. 


பாதிக்கப்பட்ட அப்பெண் தனது ட்விட்டரில், " எனது சகோதரன் கும்பல் வன்முறையாளர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டான்.  எனது ஹிஜாப் உரிமையைப் பற்றி தொடர்ந்து பேசியதற்காகவா? எங்களது சொத்துக்களைச் சேதப்படுத்தியுள்ளனர். எனது உரிமையைப் பற்றி பேசக் கூடாதா? போராடி பெறக் கூடாதா? அவர்களின் அடுத்த தாக்குதலுக்கு யார் பாதிப்புக்குள்ளாக போகின்றனர்? இந்த சங் பரிவார் கும்பல்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 


 










மாணவியின் குடும்ப உறுப்பினர்கள் நடத்தி வந்த உணவகத்தை முற்றுகையிட்ட சில கும்பல் வன்முறையாளர்கள் சகோதரர் சைப்-ஐ தாக்கியதாகவும், உணவகத்தின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக மால்பே நகர போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.