சோதனையின் அடிப்படையில் வாகனங்களின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு அதனை மதிப்பிடும் முறைக்கான வரைவு அறிவிப்பானைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


அறிவிப்பு வெளியாகி நான்கு மாதங்களுக்கு பிறகு, சோதனையின் அடிப்படையில் வாகனங்களின் பாதுகாப்பை மதிப்பீடு செய்யும் முறையை அறிமுகப்படுத்துவதற்கு அரசு முதல் அதிகாரப்பூர்வ நடவடிக்கையை எடுத்துள்ளது.


வரும் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல், பாரத் புதிய கார் மதிப்பிடும் முறை அமலுக்கு வருகிறது. கார் உற்பத்தியாளர்கள் மற்றும் காரை இறக்குமதி செய்பவர்கள் தங்களின் கார்களை சோதனைக்கு உட்படுத்தி ஸ்டார் ரெட்டிங் பெற்று கொள்ளலாம்.


இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில், "சோதனையின் அடிப்படையில் வாகனங்களின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு அதனை மதிப்பிடும் முறைக்கான வரைவு அறிவிப்பானைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது" என பதிவிட்டுள்ளார்.


 






ஒப்புதல் வழங்கப்பட்ட பயணிகள் வாகனங்களை சோதனையிட்டு அதனை மதிப்பிடும் அதிகாரம் பாரத் புதிய கார் மதிப்பிடும் திட்டத்திற்கு (என்சிஏபி) வழங்கப்பட்டுள்ளது என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்சிஏபி மூலம் அனைத்து வாகனங்களின் நட்சத்திர மதிப்பீட்டை சரிபார்க்க பொதுமக்களுக்காக ஒரு போர்டல் உருவாக்கப்படும். மதிப்பீட்டு செயல்முறை முடிந்த பிறகு, சோதனை நிறுவனம் பாரத் என்சிஏபிக்கு அறிக்கையை அனுப்பும். 


 






மதிப்பீட்டு அறிக்கையைப் பெற்ற பிறகு, புதிய கார் நட்சத்திர மதிப்பீட்டை பொது மக்களுக்காக என்சிஏபி போர்ட்டலில் பதிவேற்றும். இருப்பினும், என்சிஏபியால் கண்காணிக்கப்படும் ஒரு தன்னார்வ திட்டம் என்றே இது குறிப்பிடப்பட்டுள்ளது. மதிப்பீட்டுக்காக உற்பத்தி செய்யப்படும் கார்களின் செலவை உற்பத்தியாளரோ அல்லது இறக்குமதி செய்பவரே ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பின் அடிப்படையில் 1 லிருந்து 5 ஸ்டார்கள் வரை கார்களுக்கு வழங்கப்படும். உலகளவில் இருக்கும் கார் மதிப்பீட்டு திட்டத்தை ஒருங்கிணைக்கும் அமைப்பாகவே என்சிஏபி விளங்குகிறது. இது தனியார் அமைப்பு என்பதால், இதனை பாரத் என்சிஏபி என்றழைக்க அரசு திட்டம் வகுத்துள்ளது.