விலைவாசி உயர்வால் மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் விலைவாசி பெரிய அளவில் உயர்ந்துள்ளது. குறிப்பாக, உணவு பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், சைவ, அசைவ உணவின் விலை தொடர்பாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
சைவ உணவின் விலை அதிகரிப்பு:
ஆய்வறிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 'ரொட்டி ரைஸ் ரெட்' என்ற பெயரில் கிரிசில் மாதாந்திர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஓட்டலில் விற்கப்படும் சைவ உணவின் விலை 7 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை அதிகரித்திருப்பதால் ஓட்டலில் விற்கப்படும் சைவ உணவின் விலை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெங்காயத்தின் விலை 29 சதவிகிதமும் தக்காளியின் விலை 38 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. ஆனால், அசைவ உணவில் விலை 9 சதவிகிதம் குறைந்துள்ளதாக கிரிசில் மாதாந்திர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஓட்டல்களில் விற்கப்படும் ஒரு பிளேட் சைவ உணவின் விலையில் 21 சதவிகிதம் அரிசி மற்றும் பருப்புக்கு செலவிடப்படுகிறது. சைவ உணவில் முக்கிய பங்காற்றும் அரிசியின் விலை 14 சதவிகிதமும் பருப்பின் விலை 20 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு பிராய்லர் கோழியின் விலை 20 சதவிகிதம் குறைந்துள்ளது.
அசைவ உணவு விலையிலும் மாற்றம்:
இதன் காரணமாகவே, ஓட்டலில் விற்கப்படும் அசைவ உணவின் விலை குறைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஓட்டல்களில் விற்கப்படும் அசைவ உணவின் விலையில் 50 சதவிகிதம் பிராய்லர் கோழிக்கு செலவிடப்படுகிறது. ஆனால், ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில் பிப்ரவரி மாதத்தில் ஓட்டலில் விற்கப்படும் சைவ உணவின் விலை 2 சதவிகிதம் குறைந்துள்ளது.
கடந்தாண்டு ஜூலை மாதத்தில் இருந்து பார்க்கையில், மிகக் குறைந்த விலையில் சைவ உணவு விற்கப்பட்டு வருகிறது. அதாவது, ஒரு பிளேட் சைவ உணவு சராசரியாக 27.5 ரூபாய்க்கி விற்கப்பட்டுள்ளது. அதற்கு நேர்மாறாக, கடந்த ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில், பிப்ரவரி மாதத்தில் அசைவு உணவின் விலை 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில் பிப்ரவரி மாதத்தில், குறைவான சப்ளை காரணமாக பிராய்லர் கோழியின் விலை 10 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசத்தில் பறவை காய்ச்சல் காரணமாகவும் வெப்ப நிலை அதிகரித்ததாலும் ரம்ஜான் காரணமாக அதிகரித்த தேவை காரணமாகவும் பிராய்லர் கோழியின் விலை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: Thyroid: தைராய்டா? முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ரக்கோலி உண்ணலாமா? நிபுணர்கள் சொல்வது என்ன