மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்த பிறகு கொண்டு ரயில்வே துறையில் வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்தினர். பயணிகளின் பயண நேரத்தை குறைக்கும் பொருட்டு பல்வேறு வசதிகளுடன் அதிக செலவில் இந்த ரயில் உருவாக்கப்பட்டுள்ளது.



வந்தே பாரத்தை இழுத்து வந்த சரக்கு ரயில்:


நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் இருந்து வாரணாசி நோக்கி வந்தே பாரத் ரயில் நேற்று வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் உத்தரபிரதேசத்தின் எட்வா மாவட்டத்தின் அருகே வந்தபோது தொழில்நுட்பப கோளாறால் நின்றது.


தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய முயற்சித்தும் அதை சரி செய்ய ஊழியர்களால் முடியவில்லை. இதனால், வந்தே பாரத் ரயிலில் இருந்த பயணிகள் பலரும் சிரமத்திற்கு ஆளாகினர்.






பயணிகள் கடும் சிரமம்:

பர்தனா – சம்ஹோ ரயில் நிலையங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில் சிக்கிக் கொண்டது. தொழில்நுட்ப கோளாறால் நீண்ட நேரமாக நடுவழியிலே ரயில் சிக்கிக்கொண்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். இதையடுத்து, சரக்கு ரயில் ஒன்றின் எஞ்சின் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு அருகில் இருந்த பர்தனா ரயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ரயில் இழுத்து வரப்பட்டது.


சில பயணிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஷதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் அயோத்யா வந்தே பாரத் ரயில்களில் ஏற்றிவிடப்பட்டனர். சில பயணிகள் கான்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து ஷ்ரம் சக்தி எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அதிநவீன வசதிகளுடன் அதிக டிக்கெட் விலையுடன் உலா வரும் வந்தே பாரத் ரயிலை சரக்கு ரயில் எஞ்சின் இழுத்து வந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.