ஆந்திர பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் புதிதாக திறக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலின் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குல் நடத்தியுள்ளனர். அவர்கள் ரயிலின் ஜன்னல் கண்ணாடியை உடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செகந்திராபாத் முதல் விசாகப்பட்டினம் வரை இயக்கப்படும் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை வரும் ஜனவரி 15ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.  


காஞ்சரபாலம் அருகே உள்ள ரயில் பணிமனை அருகே சிலர் விளையாடி கொண்டிருந்ததும் அவர்களே விளையாட்டுத்தனமாக ரயில் மீது கல் எரிந்தது ரயில்வே பாதுகாப்பு படை நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.


புதன்கிழமை இரவு நடந்த இந்த சம்பவத்தால் ரயிலில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாகப்பட்டினம் போலீசார் ரயில்வே போலீஸ் படையுடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் இருந்து கிளம்பிய  ரயில் பெட்டிகள் விசாகப்பட்டினத்திற்கு புதன்கிழமை அன்று சென்றடைந்தது.


விசாகப்பட்டினத்திற்கு சென்ற அந்த ரயில் பெட்டிகள் காஞ்சரபாலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்குதான், சம்பவம் நடந்ததாக காவல்துறை தகவல் தெரிவிக்கின்றனர். ரயிலின் ஒரு பெட்டி முற்றிலுமாக சேதம் அடைந்ததாகவும் மற்றொரு பெட்டியில் விரிசல் ஏற்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.


குற்றத்தை செய்த நபர்களை தேடி வருவதாக உள்ளூர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


இதேபோன்ற சம்பவம் சமீபத்தில் மேற்குவங்கத்தில் நடந்தது. ஹவுரா முதல் ஜல்பைகுரி வரை செல்லும் வந்தே பாரத் ரயில் மீது இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டது.


 






இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாக, ஹவுரா-நியூ ஜல்பைகுரி வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கற்கள் வீசப்பட்டன. ரயில் NJP யார்டுக்கு வந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.


வந்தே பாரத் ரயில் மீது கால்நடைகள் மோதும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதனால், ரயில் சேதத்தை சந்தித்து வருவது பெரும் பிரச்னையாக மாறியுள்ளது.