ரயிலில் அளிக்கப்படும் சேவை மோசமாக இருப்பதாக பயணிகள் புகார் தெரிவிப்பது வழக்கமாகிவிட்டது. அதன் தொடர்ச்சியாக, லக்னோ - வாரணாசி கிரிஷக் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.


இந்த ரயிலின் ஏசி B5 பெட்டியில் அரசு அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. பயணிகளுக்கு துர்நாற்றம் வீசும் போர்வையும் படுக்கையும் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


அது எந்தளவுக்கு துர்நாற்றம் வீசியது என்றால், 70 வயது ஆண் பயணி மற்றும் இரண்டு பெண் பயணிக்கு குமட்டல் ஏற்பட்டு உடல்நல குறைவு ஏற்படும் அளவுக்கு இருந்தது.


இவர்கள், லக்னோ சார்பாக் ரயில் நிலையத்தில் ஏறியுள்ளனர். பாட்ஷாநகர் நிலையம் அடைந்த பிறகு, உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட பயணிகளை ரயில்வே மருத்துவர்கள் சந்தித்து சிகிச்சை அளித்தனர். அவசர மருத்துவ காரணத்திற்காக அங்கு ரயில் 30 நிமிடங்கள் வரை நிறுத்தப்பட்டது.


இதுகுறித்து வட கிழக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி பங்கஜ் சிங் கூறுகையில், "பயணிகள் மேற்பார்வையாளரிடம் புகார் அளித்ததையடுத்து, போர்வைகள் மற்றும் படுக்கையறைகள் உடனடியாக மாற்றப்பட்டன. 


ஆனால், பயணிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்ததாக புகார் எழுந்தது. இதனால், பாட்ஷாநகர் ரயில் நிலையத்தில் சுமார் 30 நிமிடம் ரயில் நிறுத்தப்பட்டது.


பாட்ஷாநகர் ஸ்டேஷனில் ரயில் நிறுத்தப்பட்ட பிறகு, ரயில் பெட்டியில் இருந்த ரயில்வே டாக்டர்கள் குழு மூன்று பயணிகளையும் பார்வையிட்டது.


பயணிகளுக்கு மருந்துகளும் வழங்கப்பட்டு வந்த நிலையில், அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு முறையாக மருத்துவ பரிசோதனை வழங்கப்பட்ட பிறகு, ரயில் புறப்பட்டு சென்றது" என்றார்.


ரயில் மற்றும் ரயில் நிலையங்களை முறையாக பராமரிக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு உயர்நீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டது.


மேலும் சுகாதாரம் இல்லாமல் இருக்கும் ரயில் மற்றும் ரயில் நிலையங்கள் குறித்து புகார் அளிக்க தனி தொலை பேசி எண்களை அறிமுகப்படுத்த வேண்டும் என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டிருந்தார்.


ரயில்களில் வழங்கப்படும் போர்வைகளை சுத்தப்படுத்தும் பணி தொடர்பான டெண்டர் பிரீமியர் கார்மெண்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.


டெண்டர் வழங்கும் போது 30 நாள்களுக்கு ஆய்வு முறையில் அனுமதிப்பதாகவும் இந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டால் டெண்டர் நீட்டிக்கப்படும் என விதிகள் ஏற்படுத்தப்பட்டது.


30 நாள்கள் முடிவில் பணியில் குறைபாடுகள் உள்ளதாக கூறி டெண்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.