மத்திய பா.ஜ.க. அரசு ரயில்வே துறையை நவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில், பயணிகளின் பயண நேரத்தை குறைப்பதற்காக மத்திய அரசு கொண்டு வந்த அதிநவீன வசதிகள் கொண்ட அதிவேக ரயில் வந்தே பாரத் ஆகும்.


வந்தே பாரத் புதிய வடிவம்:


இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்தையும் வந்தே பாரத் ரயில் மூலமாக இணைக்கும் திட்டத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது நாட்டின் முக்கிய நகரங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலானது நாற்காலிகள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நாற்காலிகள் பயணிகளுக்கு மிகவும் சொகுசான அனுபவத்தை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


அதேசமயம், வந்தே பாரத் ரயிலை புதிய பரிணாமத்திற்கு கொண்டு செல்ல ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது ட்விட்டர் பக்கத்தில், படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் மாதிரி படங்களை பதிவிட்டுள்ளார். மிகவும் ஆடம்பர சொகுசு விடுதிகளில் இருப்பது போல, ஹாலிவுட் படங்களில் காட்டப்படும் அதிநவீன சொகுசு ரயில்களில் இருப்பது போல படுக்கை வசதிகள் இதில் உள்ளது.






இந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ள அமைச்சர் வைஷ்ணவ் இதை கான்செப்ட் வெர்சன் என்றும், 2024 தொடக்கத்தில் வரும் என்றும் பதிவிட்டுள்ளார். இதனால், மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


படுக்கை வசதி:


மாதிரி படங்களில் இருப்பது போலவே வந்தே பாரத் ரயிலின் படுக்கை வசதி கொண்ட ரயில் நடைமுறைக்கு வந்தால் நிச்சயம் பயணிகளுக்கு மறக்க முடியாத பயணமாக இருக்கும். தற்போது வந்தே பாரத் ரயில்கள் சென்னையில் உள்ள ஐ.சி.எஃப். தொழிற்சாலையிலும், பெங்களூரிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய வடிவ வந்தே பாரத் ரயில்களும் தயாரிப்பு பணியில் இருக்கிறதாக கூறப்படுகிறது.


இந்த படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலில் மொத்தம் 16 பெட்டிகள் இருக்கும் என்றும், 850 பயணிகள் வரை செல்லலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தாண்டு இறுதியில் படுக்கை வசதிகள் கொண்ட இந்த புதிய வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெறும் என்றும், அடுத்தாண்டு ஜனவரியில் இதன் சேவை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


கட்டணம் குறையுமா?


வந்தே பாரத் ரயிலானது இருக்கை, படுக்கை மற்றும் மெட்ரோ ஆகிய மூன்று வடிவங்களில் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது கார்களில் இருக்கும் இருக்கை போன்ற வந்தே பாரத் ரயிலின் சேவை அமலில் உள்ளது. வந்தே பாரத் ரயிலுக்கான கட்டணம் மிக அதிகளவில் இருப்பதாகவும், அதை குறைக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், புதிய வடிவ வந்தே பாரத் ரயில்களின் கட்டணமும் சாமானிய மக்கள் பயன்படுத்தும் வகையில் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.


மேலும் படிக்க: கார்த்தி சிதம்பரம், செந்தில் பாலாஜி வரிசையில் ஆம் ஆத்மி எம்பி.. அதிரடி காட்டிய அமலாக்கத்துறை


மேலும் படிக்க: CM STALIN: ”தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பை திரும்பப் பெறுக” - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்