இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து சேவையாக இருப்பது ரயில்வே போக்குவரத்து ஆகும். இந்த நிலையில், ரயில்வே துறையை நவீனப்படுத்தும் விதமாக மத்திய அரசு வந்தே பாரத் ரயிலை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி வருகிறது.
ஆரஞ்சு நிறத்தில் வந்தே பாரத்:
இந்த நிலையில், பிரதமர் மோடி நாளை நாட்டின் பல்வேறு நகரங்களில் 9 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். வந்தே பாரத் ரயில் நாடு முழுவதும் வெள்ளை நிறங்களில் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், கேரளாவிற்குள் நாளை தொடங்கப்படும் வந்தே பாரத் ரயில் ஆரஞ்சு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தேசிய கொடியில் உள்ள மூவர்ண கொடியை அடிப்படையாக கொண்டு இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த ரயில் கேரளாவின் காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை இயக்கப்பட உள்ளது.
9 ரயில்கள்:
பிரதமர் மோடி நாளை 9 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைக்க உள்ளார். அதன் விவரம்
திருநெல்வேலி – மதுரை – சென்னை,
ஹைதரபாத் – பெங்களூர்,
விஜயவாடா – ரேணிகுண்டா –சென்னை,
பாட்னா – ஹவுரா,
காசர்கோடு – திருவனந்தபுரம்,
ரோர்கேலா – புபனேஸ்வர் – பூரி,
ராஞ்சி – ஹவுரா,
ஜாம்நகர் – அகமதாபாத்
ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ள 9 ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டிற்கும் ஒரு ரயில்:
இந்த 9 வந்தே பாரத் ரயில்கள் மூலம் ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், கேரளா, ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்களில் இயங்க உள்ளது. மற்ற ரயில்களுடன் ஒப்பிடும்போது வந்தே பாரத் ரயில் பல மணி நேரம் முன்கூட்டியே சேரும் இடத்திற்கு முன்பே சென்று சேர்கிறது.
நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ள ரயிலில் தமிழ்நாட்டின் சென்னை – நெல்லை இடையே ஒரு வந்தே பாரத் ரயில் சேவையும் தொடங்கப்பட உள்ளது. இந்த ரயில் மற்ற ரயில்களை காட்டிலும் 2 மணி நேரம் முன்கூட்டியே செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
கழிப்பிட வசதி, இருப்பிட பற்றாக்குறை, நீண்ட நேரம் பயணிப்பது போன்ற எந்த குறைகளும் இல்லாத வந்தே பாரத் ரயில் சேவையை மக்கள் விரும்பினாலும், அதன் கட்டணம் ஆம்னி பேருந்துகளுக்கு நிகராக இருப்பதால் சாமானியர்கள் வந்தே பாரத் ரயிலில் பயணிப்பது என்பது கடினமான இருப்பதாக பயணிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதனால், வந்தே பாரத் ரயிலின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாட்களாக உள்ளது.
மேலும் படிக்க: Fire Accident: திருச்சியில் இருந்து குஜராத் சென்ற ஹம்சஃபர் விரைவு ரயிலில் தீ விபத்து; இரண்டு பெட்டிகள் எரிந்து நாசம்
மேலும் படிக்க: 'மகளிர் முன்னேற்றத்திற்காக பிரதமர் பல்வேறு முன்னோடி திட்டங்களை அறிவிக்கிறார்' - மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர்