கோயம்புத்தூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் இன்று காலை கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற, 'New India Debates' எனும் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். சிறப்புரையில் அவர் பேசியதாவது, "மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா அனைத்து கட்சிகளின் ஆதரவோடு நிறைவேறியுள்ளது. சமூக முன்னேற்றம், அரசியல் முன்னேற்றம், உடல் ஆரோக்கியம், கல்வி, விளையாட்டு, விஞ்ஞானம் என அனைத்திலும் மகளிருக்கு இந்த ஆட்சியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் அரியானாவில் நடைபெற்ற கேலோ இந்தியா போட்டிகளில் அனைத்து மாநிலங்களிலும் விளையாட்டு வீராங்கனைகள் அதிக பதக்கங்களை வென்றனர். சந்திராயன் 3 திட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானிகள் பங்கு வகித்தனர். ஐஐடி முதல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பெண்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுகின்றனர். முன்பு பிரசவத்திற்காக முறையாக மருத்துவமனைகளுக்கு மகளிர் செல்வதில்லை.


கடந்த 9 ஆண்டுகளில் 94 சதவீதம் பெண்கள் பிரசவத்திற்காக முறையாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தாயும் குழந்தையும் பாதுகாக்கப்படுகிறது. இதற்காக நிதி உதவி வழங்கப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு எல்.பி.ஜி கேஸ் இணைப்பு 14.5 கோடியாக இருந்தது. இன்று 33 கோடி புதிய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் குடிநீர் வழங்கப்படுகிறது. ஆயுஷ்மான் பாரத் மருத்துவ அட்டையின் மூலம் எளிய மக்கள் சிறப்பான மருத்துவ சிகிச்சையை ரூபாய் 5 லட்சத்திற்கு பெற முடிகிறது. எய்ம்ஸ் மருத்துவமனையின் எண்ணிக்கை 7லிருந்து 22 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் புதிதாக 700 மருத்துவக் கல்லூரிகள் பிரதமர் மோடியால் துவங்கப்பட்டுள்ளது. மக்கள் மருந்தகங்கள் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.




முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 70% மகளிர் பயனடைகின்றனர். மேலும் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் 40 மில்லியன் புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இவற்றில் 75% பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மகளிர் சிறப்பாக வாழ்வதற்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக சுய உதவி குழுக்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு அவர்களை லட்சாதிபதிகளாக ஆக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், தேசத்தின் பாதுகாப்பு பணியில் மகளிர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். நாரி சக்திக்கு உதாரணமாக இந்திய நாடாளுமன்றம் இயங்கி வருகிறது.


நமது நாட்டின் நிதி அமைச்சர், ஜனாதிபதி என பெண்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படுகிறது. சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த மகளிர் சிறப்பாக சாதனைகள் புரிந்து வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டுத் துறையில் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு நேரடியாக பயன்கள் சென்றடைகிறது. வங்கி கணக்கு, ஆதார் எண் மற்றும் மொபைல் தொழில்நுட்பம் மூலம் வெளிப்படையான அரசாங்கம் சாத்தியமாகியுள்ளது. உலகின் 46 சதவீத டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவில் நடைபெறுகிறது.


கடந்த 9 ஆண்டுகளில் 185 மில்லியன் மக்கள் வறுமை கோட்டுக்கான பிரிவிலிருந்து முன்னேறியுள்ளனர். ஜி.எஸ்.டி முறை சிறப்பாக அமல்படுத்தப்பட்டு இன்று வரிவருவாய் இரப்பட்டிப்பாகியுள்ளது. இவ்வாறு பல்வேறு முன்னெடுப்புகளின் மூலம் இந்தியா சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் பத்தாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. யூனிகார்ன்கள், ஸ்டார்ட் ஆப்புகள் என அனைத்தின் எண்ணிக்கையும் அதிகரித்து தொழில் முனைவோராக பெண்கள் உருவாகி வருகின்றனர். இவ்வாறு விஞ்ஞானம் முதல் சினிமா வரை அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறி வருகிறது. அதில் பெண்களின் பங்கு மிக முக்கியமாக உள்ளது” எனத் தெரிவித்தார். இதனை அடுத்து, 'New India Debates' அமைப்பின் சார்பில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கும் பாராட்டுக்களை அவர் தெரிவித்தார்.