Vande Bharat Express: இந்தியாவில் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை வெள்ளை நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு மாற்றும் பணி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


வந்தே பாரத் ரயில்


இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில் பெட்டிகள் சென்னை ஐசிஎப் தொழில்சாலையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. 


நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை டெல்லி-வாரணாசி இடையே கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது வரை 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், இந்தாண்டு இறுதிக்குள் நாட்டில் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் என்பதே இந்திய ரயில்வே இலக்கு வைத்துள்ளது. அதனால் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.


இதுவரை 40க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகிறது.இந்த வந்தே பாரத் ரயில்கள் அனைத்தும்  வெள்ளை நிறத்திலும், ரயிலின் சில பகுதிகளில் நீல நிறத்தில் இருக்கும்.


வெள்ளைக்கு பதில் காவி


இந்நிலையில் தான், வந்தே பாரத் ரயிலின் நிறத்தை மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வந்தே பாரத் ரரயில் வெள்ளை மற்றும் நீலம் நிறத்தில் இயங்கி வரும் நிலையில், வரும் காலத்தில் இந்த ரயில் ஆரஞ்சு மற்றும் கிரே நிறத்தில் இயக்கப்பட உள்ளது. தற்போது வெள்ளை நிறத்தில் உள்ள வந்தே பாரத் ரயில் அதிகளவில் அழுக்காவதால் அதனை பராமரிக்க கடினமாக இருப்பதாலும் ரயிலின் நிறத்தை மாற்ற அரசு திட்டமிட்டது. இதனை அடுத்து, சென்னை ஐசிஎப் தொழில்சாலையில் வந்தே பாரத் ரயில் பெட்டிகளுக்கு வேறு நிறம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஆரஞ்சு-கிரே காம்பினேஷன் பயணிகளை ஈர்க்கும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. 






இதனை அடுத்து, வந்தே பாரத் ரயிலின் நிறமாற்றம் தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று சென்னைக்கு வருகை புரிந்தார். சென்னையில் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் ஐசிஎப் தொழில்சாலையில் ஆரஞ்சு-நிற பெட்டியை பார்வையிட்டார். பின்னர், வந்தே பாரத் ரயிலுக்கு புதிய நிறத்தை மாற்றுவதற்கான ஒப்புதலையும் அளித்தார்.


இது சம்பந்தமாக வெளியான புகைப்படங்களில், ரயில் பெட்கள் முழுவதும் ஆரஞ்சு நிறமாக இருக்கும். அதேநேரத்தில் கதவு மற்றும் ரயிலின் சில இடங்களில் மட்டும் கிரே நிறம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.