மின்வெட்டு காரணமாக தலித் இளைஞர் ஒருவரை அடித்து செருப்பை காலால் நக்க வைத்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. 


தொடரும் கொடூரம்:


மத்திய பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் மீது, பண்டித் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் தொடர்பான அதிர்வலைகளே நாட்டில் இன்னும் ஓயவில்லை. அதற்குள், உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் அடித்த், காலில் அணிந்திருந்த செருப்பை நாக்கால் நக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






வைரல் வீடியோ:


இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவில் “மரக்கட்டில் மீது ஒருவர் ஒய்யாரமாக அமர்ந்திருக்க, பயத்தில் நடுங்கி அருகில் நின்று கொண்டிருந்த இளைஞர் அமர்ந்திருந்த நபர் அணிந்திருந்த காலணியை நாக்கால் நக்கி சுத்தப்படுத்தியுள்ளார். அதைதொடர்ந்து, தான் செய்தது தவறு தான் என்னை மன்னித்து விடுங்கள் என, காதுகளை பிடித்து தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பும் கோரியுள்ளார். மற்றொரு வீடியோவில் ” அந்த இளைஞரை கீழே தள்ளி பலமுறை சரமாரியாக தாக்கப்பட்டதும், அந்த பகுதிக்கு மீண்டும் வரவே கூடாது என அந்த இளைஞரை கடுமையான வார்த்தைகளால் திட்டி மிரட்டியதும்” பதிவாகியுள்ளது.


வழக்குப்பதிவு:


உத்தரபிரதேசத்தின் சோனாபத்ரா மாவட்டத்தில் கடந்த வாரம் நடைபெற்றதாக கூறப்படும் இந்த சம்பவம்  தொடர்பான வீடியோ வைரலான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, தலித் இளைஞரை தாக்கிய நபர் தேஜ்பாலி சிங் என்பது அடையாலம் காணப்பட்டு, அவர் மீது எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.


நடந்தது என்ன?


இதுதொடர்பாக காவல்துறை சார்பில் வெளியாகியுள்ள தகவலின்படி “பாதிக்கப்பட்ட ராஜேந்திரன் என்பவர் சம்பவம் நடந்த ஊரில் உள்ள தனது தாய்மாமா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அங்கு மின்சார பிரச்னை ஏற்படவே அதனை ராஜேந்திரன் சரிசெய்துள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், தங்களது வீடுகளில் உள்ள பிரச்னைகளை கூறி அவரிடம் உதவி கோரியுள்ளனர். அவர்களுக்கும் ராஜேந்திரன் உதவியதோடு, அதற்கென ஒரு சிறு தொகையை கட்டணமாகவும் பெற்றுள்ளார். இதனை அறிந்த மின்சாரத்துறையில் லைன்மேனாக பணியாற்றும் அப்பகுதியை சேர்ந்த தேஜ்பலி சிங் என்பவர், ராஜேந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த பக்கமே வரக்கூடாது என மிரட்டி, காலில் விழச்செய்து செருப்பையும் நாக்கால் நக்க வைத்துள்ளார்” என கூறப்படுகிறது. இந்த சமூகம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, வடமாநிலங்களில் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட மக்கள், உயர்சாதி மக்களால் இழிவுபடுத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இது தான் இரட்டை இன்ஜின் மாடலா என, பிரதமர் மோடியை டேக் செய்து சமூக வலைதளங்களில் பரவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.