பீகாரில் ஓடும் ரயிலில் இருந்து மற்றொரு ரயிலில் செல்லும் பயணியை ஒருவர் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


பொதுவாக இந்தியாவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கத்தில் உள்ளது. பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள ரயில்வே துறை பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் உள்ளிட்ட  பல வகைகளில் பயணிகளின் வசதிக்காக ரயில்களை இயக்கி வருகிறது. ஆண்டுக்கு கோடிக்கணக்கில் பணம் கொட்டும் ரயில் பயணங்களையே பெரும்பாலும் பொதுமக்கள் விரும்புகின்றனர். டிக்கெட் கட்டணம் குறைவு, சௌகரியமான பயணம், பாதுகாப்பு என பல முறைகளை கவனத்தில் கொண்டு எங்கேயும் பயணம் செய்ய முடிவு செய்தால் அவர்களின் முதல் சாய்ஸாக ரயில் போக்குவரத்து உள்ளது. 


இப்படியான ரயிலில் பயணத்தில் அவ்வப்போது அசௌகரியத்தை கொடுக்கும் சம்பவங்களும் நடைபெறும். உடமைகள், நகைகள் திருட்டு, முன்பதிவு செய்த பெட்டியில் பயணம் செய்ய முடியாத நிலை, சக பயணிகளின் தொந்தரவு என ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளது. இதனை சரிசெய்ய ரயில்வே நிர்வாகம் கடுமையான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு ரயில்களிலும் ஆண், பெண் காவலர்கள் பயணிகளின் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர். 


இதனிடையே பீகார் மாநிலத்தின் ரயில் பயணத்தின் போது நடைபெற்ற சம்பவம் ஒன்று இணையத்தில் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஓடும் ரயிலின் வாசலில் நின்றுக் கொண்டிருக்கும் இளைஞர் ஒருவர், அடுத்த தண்டவாளத்தில் எதிரே சென்றுக் கொண்டிருக்கும் ரயிலில் வாசலின் அமர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் பயணிகளை சரமாரியாக பெல்ட்டால் அடிக்கிறார். இந்த காட்சிகள் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. 


இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள இணையவாசி, மற்றொரு ரெயிலில் வாசலில் அமர்ந்திருப்பவர்களை பெல்ட்டால் அடிக்கும் இந்த இளைஞரின் செயல் சரியா? என கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் இப்படி செய்வதால் பாதிக்கப்பட்டவர்கள் ரயிலில் கீழே விழும் ஆபத்து ஏற்படலாம். எனவே இதுபோன்ற சமூக விரோத நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். 


இந்த பதிவுக்கு பதிலளித்த கிழக்கு மத்திய ரயில்வே மண்டலம், “சம்பந்தப்பட்டவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளது.