திருவனந்தபுரம் மற்றும் காசர்கோடு இடையே கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை திருவனந்தபுரம் மத்திய ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் சேவை திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, பத்தனந்திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 11 மாவட்டங்களை உள்ளடக்கி செல்கிறது.


இதையடுத்து ரூ.3,200 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். அதன்பின் நிறைவடைந்த சில திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அதில், கொச்சி நீர் வழி மெட்ரோ திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த புது வகையான மெட்ரோ திட்டம், மின்சார படகுகள் மூலம் கொச்சியில் இருக்கும் பத்து தீவுகளை இணைக்கின்றது. மேலும் திருவனந்தபுரத்தில் டிஜிட்டல் அறிவியல் பூங்காவிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.


பின்னர் பேசிய பிரதமர் மோடி, கேரளா படித்த மற்றும் விழிப்புணர்வான மக்களை கொண்ட மாநிலம் என்று அவர் தெரிவித்தார். உலகம் முழுவதும் உள்ள மக்களின் நிலை உங்களுக்கு தெரியும். அவர்கள் பொருளாதர நெருக்கடியான இந்த சூழளிலும் இந்தியாவை அதன் வளர்ச்சி மாதிரியாக பார்க்கின்றனர். இந்தியாவின் மீதான உலகின் நம்பிக்கைக்கு பின்னால், உள்கட்டமைப்பு மேம்பாட்டில் மத்திய அரசின் இணையற்ற முதலீடுகள் உள்ளிட்டவை தான் காரணம் என்று கூறியுள்ளார். 


அனைத்து  மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். மத்திய அரசு கூட்டுறவு கூட்டாட்சியை வலியுறுத்துவதாகவும், கேரளா வளர்ச்சி அடைந்தால் இந்தியா வேகமாக வளர்ச்சி அடையும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.


இந்தியா முழுவதும் சுமார் 14 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் முதல் சேவை டெல்லி- வாரணாசி வழித்தடத்தில் தொடங்கியது. இதன் 15ஆவது சேவையாக திருவனந்தபுரம்- காசர்கோடு வரையிலான வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயிலின் வேகமானது மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும். இதில் 14 ஏசி சேர்களும் இரு எக்ஸிகியூட்டிவ் சேர் கோச்சுகளும் உள்ளன. ஏசி சேர் கோச்சுகள் அக்குவா நிறத்திலும் ஏசி எக்ஸிகியூட்டிவ் சேர்கள் பிங்க் நிறத்திலும் குறியிட்டு காட்டப்பட்டுள்ளது. இந்த ரயில் இந்தியாவின் 15 ஆவது சூப்பர்ஃபாஸ்ட் ரயிலாகும். இந்த ரயில் கேரளாவின் முதல் நீல நிற மற்றும் வெள்ளை நிறத்தினாலான ரயிலாகும்.


இந்த ரயில் திருவனந்தபுரம்- காசர்கோடு இடையே 501 கி.மீ. தூரத்தை கடக்கும். இதன் வழியே நிறைய நீர் நிலைகள், தென்னை மரங்கள், மேற்கு தொடர்ச்சி மலைகள் உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை கடந்து செல்லும். 501 கி.மீ. தூரத்தை 7.5 மணி நேரத்தில் கடக்கும். திருவனந்தபுரம்- காசர்கோடு இடையில் 6 நிறுத்தங்களில் ரயில் நிற்கும். அவை கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திரு்சூர், ஷோரனூர் ஜங்ஷன், கோழிக்கோடு, கண்ணனூர், காசர்கோடு ஆகியவை ஆகும்.