மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார் தொடர்பான மனுவை ஏற்று விசாரிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்துள்ளார். 


இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார்கள் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்,  வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார்கள்  தீவிரமானவை என்றும் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டியவை என்றும் தெரித்துள்ளார். 


மல்யுத்த வீராங்கனைகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி வாதிட்டார். ஒரு சிறுமி உள்ளிட்ட 7 வீராங்கனைகள் வழக்கு தொடர்ந்துள்ளதாக கபில் சிபில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் வீராங்கனைகளின் புகார் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கை வெளியிடப்படவில்லை எனவும், குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை எனவும் கபில் சிபில் புகார் தெரிவித்தார். புகார் அளித்த மல்யுத்த வீராங்கனைகளின் பெயர்களை வெளியிடக்கூடாது எனவும், மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


மீண்டும் போராட்டம்


இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் புகாரில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நேற்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன்  சிங், இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும், அவர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பஜ்ரங் பூனியா, சாக்‌ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த நட்சத்திரங்கள் டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் போராட்டம் நடத்தினர். 


முன்னணி மல்யுத்த வீரர்கள்,  பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக்கோரி கடந்த திங்கள் கிழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.பிரிஜ் பூஷன்  சிங்கிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐந்து பேர் கொண்ட மேற்பார்வைக் குழு மேற்கொண்ட விசாரணை குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று மல்யுத்த வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் ரவி தஹியா உள்ளிட்டோர் ஜனவரி மாதம் தங்கள் போராட்டத்தைத் தொடங்கினர். இந்நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, பிரபல குத்துச்சண்டை வீராங்கனை எம்.சி.மேரி கோம் தலைமையில் ஐந்து பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவை அமைப்பதாக  அறிவித்திருந்தார். இதனையடுத்து அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.  குழு தனது அறிக்கையை ஏப்ரல் முதல் வாரத்தில் சமர்ப்பித்தது, ஆனால் அமைச்சகம் அது தொடர்பான எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.  இந்நிலையில் மீண்டும் போராட்டம் நடைபெற்றது. 


டெல்லி காவல்துறை விசாரணைக் குழுவிடம் அறிக்கை கேட்டுள்ளது. தங்களுக்கு 7 புகார்கள் வந்துள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.