மே மாதம் 10ஆம் தேதி, கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் முடிவுகள், வரும் 13ஆம் தேதி வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது.


கட்சிகளின் வியூகம் என்ன?


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அரசியல் பரபரப்பு தொற்றி கொண்டது. கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில், பிரதமர் மோடியின் செல்வாக்கை அதிகமாக நம்பியுள்ளது பாஜக.


அதேபோல, ஆட்சியை பிடிக்க ஊழல் விவகாரத்தையும் இடஒதுக்கீட்டையும் கையில் எடுத்துள்ளது காங்கிரஸ். வேட்பாளர் தேர்வில் இரண்டு கட்சிகளும் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. வேட்பு மனுவை திரும்பப்பெறுவதற்கான கால அவகாசம் நேற்றோடு முடிவடைந்த நிலையில், மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 2,613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பெண் வேட்பாளர்கள்:


இதில், 185 வேட்பாளர்கள் மட்டுமே பெண்கள் ஆவர். கர்நாடகாவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தன்னுடைய வேட்பாளர்களை பாஜக களத்தில் இறக்கியுள்ள நிலையில், 223 தொகுதிகளில் காங்கிரஸ் களம் கண்டுள்ளது. அதேபோல, மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளம் சார்பில் 207 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். மொத்தம் 918 சுயேட்சைகளும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 685 பேரும் களத்தில் உள்ளனர்.


கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலில், 2,655 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், 2013 தேர்தலில் 2,948 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 2018இல் 219 ஆக இருந்த பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை இம்முறை 185 ஆக குறைந்துள்ளது. 2013ல் 170 பெண் வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.


வேட்பாளர்கள்:


2018 சட்டப்பேரவை தேர்தலில் 2,436 ஆக இருந்த ஆண் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் இந்த முறை 2,427 ஆக குறைந்துள்ளது. 2018இல் 583 ஆக இருந்த வேட்பு மனுவை திரும்பப் பெற்றோரின் எண்ணிக்கையும் இம்முறை 517 ஆக குறைந்துள்ளது.


பல்லாரி நகரத் தொகுதியில் அதிகபட்சமாக 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதற்கு அடுத்தபடியாக, ஹோஸ்கோட் மற்றும் ஆனேகல் தொகுதிகளில் தலா 23 பேர் போட்டியிடுகின்றனர். மங்களூரு, பண்ட்வால், தீர்த்தஹள்ளி, குந்தாப்பூர், காபு, யெம்கனமர்டி மற்றும் தியோதுர்க் ஆகிய 7 தொகுதிகளில் குறைந்தபட்சமாக 7 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர்.


28 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட மாநிலத் தலைநகரான பெங்களூருவில் 38 பெண்கள் உட்பட 389 பேர் போட்டியிடுகின்றனர். அதிக எண்ணிக்கையிலான பெண்கள் (ஆறு) ராஜராஜேஸ்வரிநகர், ஜெயநகர் மற்றும் கேஜிஎஃப் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். நிப்பானி, ஹரப்பனஹள்ளி, மாலூர், சிக்பெட் ஆகிய இடங்களில் தலா ஐந்து பெண் வேட்பாளர்கள் உள்ளனர்.


பட்டியல் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட 36 தொகுதிகள், பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட 15 தொகுதிகள் உள்பட 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.