காந்திநகர் - மும்பை வழித்தடத்தில் இன்று சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் குஜராத்தில் உள்ள ஆனந்த் ஸ்டேஷன் அருகே மாட்டின் மீது மோதி உள்ளது. ரயிலின் முன்பக்க பம்பரில் மட்டும் சின்ன சேதம் ஏற்பட்டது. இதனால், ரயில் பயணம் 10 நிமிடங்களுக்கு தடைப்பட்டது.


 






முன்னதாக, வியாழக்கிழமை அன்று எருமைக் கூட்டத்தின் மீது வந்தே பாரத் ரயில் மோதியது. 


வியாழக்கிழமை அன்று, மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காந்திநகருக்கு பிரதமர் மோடி கடந்த வாரம் தொடங்கி வைத்த புதிய வந்தே பாரத் ரயில் வந்து கொண்டிருந்தது. சரியாக காலை 11.15 மணிக்கு வத்வா ரயில்நிலையத்தில் இருந்து மணிநகர் ரயில் நிலையத்தின் அருகே ரயில் வந்து கொண்டிருந்தது.


அப்போது, தண்டவாளத்தை 3 – 4 எருமைகள் கடந்து கொண்டிருந்தது. அதிவேகமாக வந்து கொண்டிருந்த ரயில், தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்த எருமை மாடுகள் மீது மோதியது. இதில், வந்தே பாரத் ரயிலின் எஞ்சின் மீது பொருத்தப்பட்டிருந்த முகப்பு பகுதி கடுமையாக சேதம் அடைந்தது.


இதனால், ரயில் பாதி வழியிலே நிறுத்தப்பட்டது. இதையடுத்து, எஞ்சின் பகுதியை ரயில் எஞ்சின் டிரைவர்கள் சோதித்தனர். அப்போது, முகப்பு பகுதி மட்டுமே சேதமடைந்திருந்தது தெரியவந்தது. எஞ்சின் பகுதியில் எந்தவித சேதமும் அடையவில்லை. இதையடுத்து, சேதமடைந்த பகுதி 8 நிமிடங்களில் நீக்கப்பட்டது. பின்னர், வந்தே பாரத் ரயில் வழக்கம்போல இயங்கியது.


எருமை மாடுகள் மீது மோதியதால் 8 நிமிடங்கள் ரயில் இயங்குவதற்கு தாமதம் ஆனாலும், வழக்கமாக காந்திநகரை வந்தடையும் நேரத்திற்கு வந்தே பாரத் ரயில் வந்தடைந்தது.


இந்த சம்பவத்தில் வந்தே பாரத் ரயில் மீது மோதிய எருமை மாடுகளின் நிலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனாலும், வந்தே பாரத் ரயிலின் முகப்பு பகுதியில் எருமை மாடுகளின் ரத்தம் சிதறியிருப்பது போன்று புகைப்படத்தில் உள்ளது. 


இதுகுறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், "கால்நடைகளுடன் இதுபோன்ற மோதல் சம்பவங்கள் தவிர்க்க முடியாதவை. இது மனதில் வைக்கப்பட்டே ரயில் வடிவமைக்கப்பட்டது. ரயிலின் முகப்பு பகுதி மாற்றக்கூடியவை" என்றார்.


பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் இந்த ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். காந்திநகரில் இருந்து அகமதாபாத்தில் உள்ள கலுபூர் ரயில் நிலையம் வரை பயணம் செய்தார். காந்திநகரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலும், மும்பையில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள ஆனந்த் நகருக்கு அருகே பிற்பகல் 3.44 மணிக்கு மாட்டின் மீது ரயில் மோதியது.


இதுகுறித்து மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் சுமித் தாக்கூர் கூறுகையில், "ரயிலின் முன் பகுதியில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்" என்றார்.


வந்தே பாரத் ரயில் மிகவும் சொகுசு வசதிகள், கழிவறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்ட ரயில் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற ரயில்களை காட்டிலும் இந்த ரயிலில் கட்டணமும் மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.